/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
தந்தையின் நாவலை மொழிபெயர்த்த மகன்
/
தந்தையின் நாவலை மொழிபெயர்த்த மகன்

சிங்கப்பூர் — கத்தோலிக்கத் தொடக்கக் கல்லூரியில், இரண்டாம் நிலை பயிலும் மாணவன் அலிஃப் அஹ்மது(18). 2020இல் தனது தந்தை எழுதிய 'சிங்கப்பூரில் சரவணன்' என்ற தமிழ் நாவலை இவர் 2025இல் மூன்று இதயங்கள், ஒரு துயரம் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இந்நூலின் முதல் பிரதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் லோ (ஜலான் பெசார்- வாம்போ தொகுதி) மொழிபெயர்ப்பு ஆசிரியர் அலிஃப் அஹ்மதிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
'தமிழ் இலக்கியம் பல நூற்றாண்டுகாலப் பாரம்பரியத்தையும், ஆழமான சிந்தனைகளையும், வாழ்வியல் விழுமியங்களையும் கொண்டுள்ளது. இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதன் மூலம், தமிழ்மொழி அறியாத சிங்கப்பூரர்களும், உலகெங்கிலும் உள்ள ஆங்கிலம் பேசுபவர்களும் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு மற்றும் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும். இது சிங்கப்பூர் போன்ற பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தில் ஒருமைப்பாட்டை வளர்க்கும். சிங்கப்பூரின் இலக்கியப் பரப்பிற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கும். அலீஃப் அஹ்மது தனது தந்தையின் புதினத்தை 'த்ரீ ஹார்ட்ஸ், ஒன் சாரோ' என மொழிபெயர்த்தது போன்ற முயற்சிகள், சிங்கப்பூரின் ஆங்கில இலக்கியப் பரப்பில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பதற்கான அழைப்பாகவே தெரிகிறது. இது போன்ற முயற்சிகள் தொடர வேண்டும்' என்று ஷான் லோ இருவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் அறியப்பட்ட எழுத்தாளர், பதிப்பாளர், தற்சமயம் தமிழ் சினிமாவிலும் இயக்குநராக அறிமுகமாகியுள்ள மில்லத் அகமது எழுதிய 'சிங்கப்பூரில் சரவணன்' என்ற நாவல்.
இந்த நாவல் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய குறுநாவல் போட்டியில் வெற்றி பெற்று, 2020ஆம் ஆண்டு நூலாக அச்சிடப்பட்டது. இதுவரை அமெரிக்கா தமிழ்ப் பல்கலைக்கழக விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, புதுச்சேரி படைப்பாளர் இயக்க விருது, காஞ்சிபுரம் முத்தமிழ் மைய விருது, கள்ளக்குறிச்சி களரி காலை இலக்கிய விருது, இந்தியப் பாரம்பரிய கலை இலக்கிய விருது என ஆறு விருதுகளைப் பெற்றுள்ளது.
இந்த நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நினைத்தபோது, இவரின் மகன் அலீஃப் அஹ்மது தான் மொழிபெயர்க்கிறேன் என்று ஆர்வத்துடன் முன்வந்தார். அப்போது அவர் தூய பட்ரிக்ஸ் பள்ளியில் உயர்நிலை நான்கில் (ஓ லெவல்) படித்துக்கொண்டிருந்தார். படிப்பிற்கிடையில் நேரம் கிடைக்கும்போது கொஞ்சங் கொஞ்சமாக மொழிபெயர்க்க தொடங்கினார். 2024 பள்ளி டிசம்பர் விடுமுறையில் நிறைவு செய்தார். இவ்வாண்டு சிங்கப்பூரின் அறுபதாம் ஆண்டு வைர விழாவை முன்னிட்டு இந்நூல் வெளியீடு கண்டது.
தனது தந்தையின் நாவலை முதன்முதலில் வாசித்த அலீஃப் அஹ்மது, அந்தக் கதையால் ஈர்க்கப்பட்டார். மேலும் இக்கதைப் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
அவரது தந்தை மில்லத் அகமது கூறும்போது, தனது மகன் இந்நூலை மொழிப்பெயர்ப்பு செய்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது என்கிறார். மேலும், “மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல்” என்ற திருக்குறள் நினைவுக்கு வருகிறது என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
- நம செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
Advertisement