/
உலக தமிழர்
/
அமெரிக்கா
/
செய்திகள்
/
அமெரிக்காவை நெகிழ வைத்த கம்பராமாயண இசைக்கச்சேரி! கம்ப்யூட்டர் யுகத்திலும் 'கம்பராமாயணம்' உயிர்ப்பு
/
அமெரிக்காவை நெகிழ வைத்த கம்பராமாயண இசைக்கச்சேரி! கம்ப்யூட்டர் யுகத்திலும் 'கம்பராமாயணம்' உயிர்ப்பு
அமெரிக்காவை நெகிழ வைத்த கம்பராமாயண இசைக்கச்சேரி! கம்ப்யூட்டர் யுகத்திலும் 'கம்பராமாயணம்' உயிர்ப்பு
அமெரிக்காவை நெகிழ வைத்த கம்பராமாயண இசைக்கச்சேரி! கம்ப்யூட்டர் யுகத்திலும் 'கம்பராமாயணம்' உயிர்ப்பு
ஆக 21, 2025

டாலஸ்: கம்பராமாயணத்திற்கு இசை வடிவம் கொடுத்து அமெரிக்காவில் அதை ஒரு முழு நீளக் கச்சேரியாக அரங்கேற்றிக் கம்பனைக் கொண்டாடிப் பெருமைப் படுத்தி உள்ளார்கள்.
இந்த நிகழ்வு அமெரிக்க 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' சார்பில் . டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள டாலஸ் நகரில், நாக் தியேட்டரில் அரங்கு நிறைந்து நடந்தேறியது.
nsmimg67474nsmimg
ஏற்கனவே சங்கப்பாடல்களை தனது இசையின் மூலம் உலக ரசிகர்களுக்கு எடுத்துச் சென்ற இசையமைப்பாளர் ராலே ராஜன் வழி நடத்தினார். நிகழ்ச்சிக்காகத் தெரிவு செய்யப்பட்ட கம்பராமாயணப் பாடல்களை கர்நாடக சாஸ்திரிய சங்கீதத்தில் பயிற்சி பெற்றவரும் பல இசை நிகழ்வுகளிலும் , திரைப்படங்களிலும் பாடியுள்ளவருமான ப்ரியா கிருஷ் பாடினார். அவருடன் இசைக்கலைஞர்கள் , ராஜு பாலன் -மிருதங்கம், உமாமகேஷ் -வயலின், சாய் சங்கர் கணேஷ் -பியானோ, ஸ்கந்த நாராயணன் -கஞ்சிரா என இணைந்தனர்.
nsmimg67473nsmimg
நிகழ்வினை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் அன்னபூர்ணா ஒருங்கமைத்திருந்தார்.அடுத்த தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகள் நிலாவும், மீனாக்ஷியும், இசைக்கலைஞர்களைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்று மேடையில் அமரவைத்தார்கள். செல்வி காயத்ரி பாலாஜி, ஒவ்வொரு இசைக்கலைஞரையும் குறித்து சிறு குறிப்பு ஒன்றைக் கூறி வரவேற்றபோது அவரவர்க்குரிய படங்கள் திரையில் மின்னிக் கொண்டிருந்தன.பழனி ஜோதி என்பவர் பாடப்படும் கம்பன் பாடல்களில் அமைந்திருக்கும் கவிதை நயம் குறித்து சிறப்பாக விளக்கம் அளித்தார்..இதற்காகவே அவர் நியூ ஜெர்சியிலிருந்து வருகை தந்திருந்தார்.
nsmimg67472nsmimg
கம்பனின் சொல்லை இசையென மாற்ற
ஒரு கச்சேரியில் பாடப்படும் பாடல்களுக்கு ஒருவர் அருகில் அமர்ந்து விளக்கம் சொல்வார் என்பது ஒரு புதுமை. காவியம் என்றால் என்ன, கம்பராமாயணம் குறித்து தமிழனாக ஒருவர் எப்படி பெருமைப்படலாம், கம்பனின் சொல்லை இசையென மாற்ற ராஜன் என்ன செய்துள்ளார், பாடகி ப்ரியா சொற்களையும் , பொருளையும் எப்படிப் பாவங்களாகவும், ஸ்வரங்களாகவும் மாற்றுகிறார் என்பதை,ரசனையெனும் பாதை ஒன்றைக் கட்டமைத்து அதற்குரிய விளக்கங்கள் எனும் துணையுடன் ரசிகர்களை அழைத்துச் சென்றது போல் இருந்தது.
கம்பராமாயணக் காவியத்தில் எத்தனை காண்டம் எத்தனை பாடல்கள் என்ற முன்னறிவு இல்லாமல் வந்திருந்தவர்களுக்கும் கூட ஒரு முழுமையான புரிதலைக் கொடுப்பதாக பழனி ஜோதி அளித்த அந்த விளக்கங்கள் அமைந்திருந்தன.அவ்வாறு பாடல் விளக்கம் சொல்லும்பொழுது திரையில் முழுப்பாடலும், பாடலுக்கு உகந்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி வரையப்பட்ட படங்களும் காட்சியாகத் தோன்றின.
nsmimgGallerynsmimg
பாடல் குறித்த பழனி ஜோதியின் விளக்கங்கள் நிகழ்வை இனிப்பாக்கியதா, சரியான ஸ்வரங்களுடன் பாடிய பாடகி ப்ரியா கிருஷாவின் குரல் இனிமையாக்கியதா என்று கேட்டால் இரண்டும் இணைந்துதான் என்பது வந்திருந்த ஒவ்வொரு ரசிகரின் கருத்தாகவும் இருந்தது. பழனி சொல்லும் விளக்கங்களுக்கு ஏற்ப, ப்ரியா, ஒரு இடத்தில் நான்கு பாவங்களில் பாடவேண்டியதை பன்னிரண்டு பாவங்களில் பாடினார்.
அண்ணலும் நோக்கினான்!
. “அண்ணலும் நோக்கினான்! அவளும் நோக்கினாள்” - வரிகளை அத்தனை பாவங்களில் ப்ரியா பாடியதைக் கேட்ட ஒரு ரசிகை மேடையேறி வந்து ப்ரியாவிடம், “குழந்தே, நீ சீதையை கண்முன்னாடி நிறுத்திட்டே” என்றார்.
அந்தப் பாடலுடன் , “தோள் கண்டார், தோளே கண்டார்” பாடலும் , பழனியும் ப்ரியாவும் ஒத்திசைவுடன் அழைந்து இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்தவர்களாக மேடையில் மாயம் புரிந்தார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள்.
“கடலோ மழையோ” என்று நிகழ்விற்குப் பெயர் வைத்திருந்தார்கள். மிருதங்கம் வாசித்த ராஜு பாலனும், கஞ்சிரா வாசித்த ஸ்கந்தாவும், தனிஆவர்த்தனம் வாசித்து உள்ளரங்காக இருந்தாலும் மானசீகமாக கடலையும் மழையையும் அரங்கில் வரவழைத்துக் காட்டினார்கள். இசை அமைத்த ராலே ராஜன் , பாடலின் இடையே மிருதங்கம், கஞ்சிரா கலைஞர்களைத் தனி ஆவர்த்தனம் செய்யவைத்து ,அவரவர்க்கும் தனித்திறன் வெளிப்படுத்தக்கூடிய இடங்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் பாடகி ப்ரியா பாடிய பன்னிரண்டு பாடல்களிலும் பன்னிரண்டு ப்ரியாவாக தனது பாவங்கள் வழியே மாறித் தோன்றினார். நிகழ்வில் ஆரம்பத்தில் பாடிய உலகம் யாவையும்” பாடலில் கம்பன் காணும் பிரபஞ்சத்தைப் ப்ரியாவும் இசைக்குழுவினரும் காதில் இசையெனப் பொழிய ரசிகர்களின் மனக்கண்ணில் காட்சியானது. “தோள் கண்டார் தோளே கண்டார் பாடலில்” ஒரு பாணனைப் போல மிதிலைக்கு அழைத்துச் சென்ற ப்ரியா, கடலோ மழையோ-வில் சீதையின் உள்ளமெனக் குழைந்து பாடினார்.
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்டுள்ள கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்திலிருந்து போர் வர்ணனைகள் சொல்லும் பாடல்களைப் பொதுவெளியில் இதுவரை இசையமைத்து யாரும் பாடியுள்ளதாகத் தெரியவில்லை. வெக்கையில் சுழன்றுவரும் காற்றின் ஓசை ஒலிக்க ஆரம்பித்தவுடனேயே, குழந்தை பெரியவர் என எவ்வயதினரும் எந்தவித முயற்சியுமின்றி அது போர்க்களம் என உணர ஆரம்பித்துவிட்டார்கள்.
பாடல்களுக்கு விளக்கம் சொன்ன பழனி ஜோதி , கம்பனின் சொற்களில் சூரியனே வெடிக்கிறது என்றார். போரின் வன்மையை ப்ரியாவின் குரலும், இசையும் உணர்த்தியதாலோ என்னவோ, தங்களுக்குப் பிடித்தப் பாடலென பெரும்பாலான ரசிகர்கள் அதைக் குறிப்பிட்டார்கள்.
காவியத்தை எழுதிய கம்பன் ராமனைப் போற்றுவதிலும் இராவணனைப் போற்றுவதிலும் மாற்றம் வைக்கவில்லை. இலக்கியம் அறிந்த இசையமைப்பாளர், ராலே ராஜன், அதைச் சிறப்பிக்கும் விதமாக இராவணன் இறந்து கிடக்கும் போர்க்களத்தில் விபூஷனன் பார்வையில் உள்ள “போர் மகளை கலை மகளை புகழ் மகளை” பாடலுக்கு இசையமைத்திருந்தார். ப்ரியா-வின் குரலில் கேட்ட அனைவருக்கும் சோகம் அப்பிக்கொண்டது.
வரவேற்புரை வழங்கிய காயத்ரி பாலாஜியும், அன்னபூர்ணாவும் இதைத்தான் தங்களுக்குப் பிடித்த பாடல் எனச் சொன்னார்கள்.
இப்படி ஒரு நிகழ்வை , மங்களகரமான பாடலைப் பாடி முடிப்பதுதான் முறை என்கிற வண்ணத்தில் , “இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்” பாடல் பாட, பின்னணியில் திரையில் ராமனின் நீலவண்ணக் கால்களும், அதன் அருகில் அணிலும் அமைய, கண்ணிற்கும் காதிற்கும் இனிமையென இசைக் கச்சேரி நிறைவுக்கு வந்தது.
கர்நாடக சங்கீதத்தில் Chords
நிகழ்வின் முடிவில் ராலே ராஜனும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒருங்கமைப்பாளர் ஆஸ்டின் சௌந்தரும் நன்றியுரை வழங்கினார்கள். ராஜன் தனது உரையில் , இசைக்கலைஞர்களைப் பாராட்டுவதுடன் அவர்கள் எங்ஙனம் தான் செய்த புதுமைகளை அவர்கள் உள்வாங்கி உதவினார்கள் என்று விளக்கினார். கர்நாடக சங்கீதத்தில் இதுவரை யாரும் Chords யாரும் உபயோகித்ததில்லை என்றும், இன்றைய இசையில் அதை உபயோகித்துள்ளோம் என்றார். கர்நாடக சங்கீதம் தெரிந்த சாய் கணேஷால்தான் அது சாத்தியமானது என்றார்.
'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) நண்பர்கள் நடத்தும் பூன் இலக்கிய முகாமில் கம்பராமாயணம் அமர்வில் பேசப்பட்ட பாடல்கள்தான் இந்த இசை நிகழ்விற்கான ஆதாரக்கனவை உருவாக்கியது'. பாடிய பாடல்களிலேயே, அதிக ஸ்வரங்களைக் கொண்டது 'தோள்கண்டார் தோளே கண்டார் 'பாடல்தான் . அதைச் சாத்தியமாக்கியது ப்ரியா கிருஷும் இந்தக் குழுவும்தான்'' என்றார்.
ஸ்கந்த நாராயணனை நல்ல தாளம் லயம் ஞானம் உள்ளவர் என்றார். இந்த நிகழ்வின் பயிற்சி முழுதும் சூம் இணைய சந்திப்பு வழியாக நடந்தாலும், மிருதங்கம் வாசித்த ராஜு பாலனும், வயலின் வாசித்த உமா மகேஷும் ஒருவருக்கொருவர் புரிதலுடன் வாசிப்பதைப் பிரமிப்புடன் பார்த்ததை குறிப்பிட்ட போது அரங்கம் கைதட்டலில் அதிர்ந்தது. இந்த நிகழ்விற்காக ப்ரியாவும், ராஜனும் நான்கு மாதம் பயிற்சி செய்ததாகவும், இப்படி ஒரு இசை அனுபவத்தை அனைவருக்கும் கொடுத்ததற்கு ப்ரியாவிற்கு நன்றி என்றும் கூறினார்.
ஆஸ்டின் சௌந்தர், கம்பராமாயணத்தையும் தமிழ் இலக்கியத்தையும் அமெரிக்காவில் வாழும் இரண்டாம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதின் அவசியத்தையும், அவர்களில் சிலர் இந்த நிகழ்வின் அங்கமாக இருந்ததையும் கூறி அனைவருக்கும் நன்றி கூறினார்.
வாழும் தமிழ் விழா-வில் உலக நாடுகள்
'நியூ யார்க்கில் ஏப்ரல் 2026-ல் நடக்கவிருக்கும் வாழும் தமிழ் விழா-வில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் தமிழ் எழுத்தாளர்களும், அமெரிக்க ஆங்கில எழுத்தாளர்களும், பதிப்பகத்தினரும், இரண்டாம் தலைமுறையினரும் கலந்துகொள்வார்கள்' என்றும் கூறினார்.
அவர்,'தமிழ் நவீன இலக்கியத்தை அடுத்த தலைமுறைக்கும், தமிழ் அறியாதோருக்கும் எடுத்துச்செல்லவிருக்கும் அந்த விழாவில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சி இந்தக் கணினிக் காலத்திலும் 'கம்பராமாயணம்' உயிர்ப்போடு விளங்கி பரவி வருவதை அறிய முடிந்தது.
நமது அமெரிக்க வாசகர் - ஆயை கி. செல்வன்.
Advertisement