
பி.மாரிமுத்து, வில்லிவாக்கம், சென்னை.
*ஓராண்டாகியும் என் குழந்தை பேசவில்லையே...
உங்கள் குழந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தால் தீர்வு கிடைக்கும். பேச்சியம்மனுக்கு படையல் இட்டோ அல்லது கஞ்சி வார்த்தோ வழிபடுங்கள். அந்த பிரசாதத்தை உங்கள் குழந்தைக்கு கொடுப்பதோடு மற்ற குழந்தைகளுக்கும் கொடுங்கள்.
ஆர்.கேசவன், ராஜபாளையம், விருதுநகர்.
*திருவிழா தவிர மற்ற நாளில் கிராமத்து கோயில்களில் வழிபாடு நடப்பதில்லையே...
கோயிலில் தினமும் ஒரு வேளையாவது பூஜை செய்தால் ஊருக்கே நன்மை.
வி.லதா, வடக்கிபாளையம், கோயம்புத்துார்.
*சூலம் என்பதன் பொருள் என்ன
ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு திசை நோக்கியிருக்கும். அந்த கிரகத்திற்குரிய கிழமையில் அதன் எதிர்திசையில் பயணம் செல்லக் கூடாது. இதையே 'சூலம்' என்கிறார்கள். உதாரணமாக சூரியனுக்குரிய கிழமை ஞாயிறு. திசை கிழக்கு. ஞாயிறன்று மேற்கு நோக்கி பயணம் செய்ய வேண்டாம்.
எம்.வேணி, புவனகிரி, கடலுார்.
*கோபுரத்தை புறாக்கள் தினமும் வட்டமிடுகிறதே...
கோயிலை பக்தியுடன் நாம் வலம் வந்து வணங்க வேண்டும் என புறாக்கள் சொல்கின்றன.
கே.வினோதினி, வள்ளியூர், திருநெல்வேலி.
*எட்டாம் தேதியன்று சுபநிகழ்ச்சி நடத்தலாமா...
எட்டு, பதின்மூன்று தேதிகளை நல்ல நாள் இல்லை என்கிறது எண் கணிதம். ஆனால் 'யோகம்' நன்றாக இருந்தால் இந்த தேதிகளில் சுபநிகழ்ச்சி நடத்தலாம்.
கே.பரமேஸ்வரி, ஜனக்புரி, டில்லி.
*தளிகை என்பது என்ன?
'ஸ்தாளீ'' என்பதற்கு 'உணவுகள் நிறைந்த தாம்பாளம்' (தட்டு) என்பது பொருள். சுவாமிக்கு நிவேதனம் செய்ய எடுத்து வரும் தாம்பாளத்திற்கு இச்சொல் பயன்பட்டது. நாளடைவில் 'தளிகை' என்றானது.
பி.ருத்ரசிவன், சிவகிரி, தென்காசி.
*கைப்பிடியளவு இருக்கும் விநாயகர் சிலையை வீட்டில் வழிபடலாமா?
வழிபடலாம். வீட்டிலுள்ள சுவாமி சிலைகள் கைப்பிடியளவு இருந்தால் போதுமானது. அதை விட உயரமான சிலைகளை தவிர்ப்பது நல்லது.
சி.வைசாலி, சென்னபட்னா, பெங்களூரு.
*ராஜ விருந்து என்றால் என்ன?
அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்களுடன் விழா காலங்களில் மன்னர்கள் உண்பது வழக்கம். ஆனால் தற்போது ஜனாதிபதி, கவர்னர் போன்றோர் சுதந்திர, குடியரசு நாட்களில் தேனீர் விருந்து நடத்துகிறார்களே அதுதான் ராஜ விருந்து.
எல்.ஸ்ரீராம், வடமதுரை, திண்டுக்கல்.
*துளசி மாலையில் வெள்ளிப்பூண் பிடிக்கலாமா?
ருத்திராட்சம் போல துளசிமாலையும் புனிதமானது. தங்கம் அல்லது வெள்ளியில் பூண் பிடித்து அணியலாம்.

