உங்களுக்கு ஒரு கேர்ள்பிரண்ட் இருந்தாரா ? ; மோகன்லால் மகனை மடக்கிய எஸ்தர் அனில்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் 'திரிஷ்யம்'. அதன் பிறகு வெளியான அதன் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது 'திரிஷ்யம்' படத்தின் மூன்றாம் பாகம் வரும் மே 21ம் தேதி ரிலீசுக்குத் தயாராக இருக்கிறது. முதல் பாகத்தில் இருந்து மோகன்லாலின் இளைய மகள் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் எஸ்தர் அனில். இவர் அதற்கு முன்பாகவே மோகன்லால் நடித்த 'ஒரு நாள் வரும்' என்கிற படத்தில் அவரது மகளாக நடித்திருந்தார்.
அந்தச் சமயத்தில் படத்தின் தயாரிப்பாளர் மணியம்பிள்ளை ராஜு என்பவர், எஸ்தர் என்கிற பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயர் வைக்கலாமா என்று கேட்டுள்ளார். அதை உடனடியாக மறுத்த மோகன்லால் எஸ்தர் என்பது நல்ல பெயர்தான், எனது மகன் பிரணவின் கேர்ள் பிரண்டின் பெயரும் கூட அதுதான் என்று சொல்ல, அப்போது முதல் எஸ்தர் அனில் என்கிற பெயரே இவருக்கு நிலைத்து விட்டது.
அதன் பிறகு 'பாபநாசம்' படத்திலும் கமலுக்கு இளைய மகள் கதாபாத்திரத்தில் எஸ்தர் அனில் நடித்தார். அந்தச் சமயத்தில் இயக்குனர் ஜீத்து ஜோசப்பிடம் உதவியாளராக பிரணவ் மோகன்லால் பணியாற்றி வந்தார். அப்போது அவரிடம் சென்ற எஸ்தர் அனில் குறும்புத்தனமாக உங்களுக்கு எஸ்தர் என்கிற கேர்ள் பிரண்ட் இருந்தாரா? என்று கேட்க, ஆச்சரியப்பட்டுப் போன பிரணவ் உனக்கு எப்படி இந்த விஷயம் தெரியும்? என்று கேட்டுள்ளார். அதற்கு உங்கள் தந்தைதான் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார் என்று பதில் சொல்லி அவரை இன்னும் ஆச்சரியப்படுத்தியதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் எஸ்தர் அனில்.