'கருப்பு' வரான், வழி மறிக்காதீங்க...: ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் வீடியோ
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா நடித்துள்ள படம் 'கருப்பு'. இப்படம் பல இடையூறுகளை தாண்டி, ஒருவழியாக இன்று ரிலீசாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி இன்று காலை 9 மணிக்கு சிறப்பு காட்சி உள்பட இன்றும் நாளையும் 5 காட்சிகள் திரையிட தமிழக அரசும் அனுமதி வழங்கியது.
இந்த நிலையில், கடைசி நேரத்தில் பணப்பிரச்னையால் மீண்டும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் இன்று காலை மற்றும் மதியம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலில் தவித்து ரிலீசாவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளை அடுத்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி, கண்ணீருடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது: ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், இது நடந்திருக்க கூடாது. படம் பார்க்க தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா என எங்கு நீங்கள் தியேட்டருக்கு காலையில் 9 மணிக்குச் சென்றிருந்தாலும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். படம் பார்ப்பதே, நமது வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளில் இருந்து வெளியே வருவதற்குதான். அப்படி இருக்கும்போது, அப்படியான படம் பார்க்க முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நானும் இதை எதிர்பார்க்கவில்லை.
இன்று மாலை 6 மணிக்குள் இந்த பிரச்னைகள் எல்லாம் சரியாகி படம் வெளியாகும் என நம்புகிறேன். மே 14ம் தேதி கருப்பு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெறும் என்று நான் பலமுறை யோசித்து இருக்கிறேன். ஏனெனில் நானும் அதற்கான வாக்குறுதியை கொடுத்திருக்கிறேன். அழுகை வருகிறது, அது வலி.. வேற டிபார்ட்மென்ட். கடவுள் இந்த படத்திற்கு உள்ள எல்லா பிரச்னைகளையும் சரி செய்து கொடுப்பார். அனைவரும் படம் வெளியாவதற்கு வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பல தடைகளைக் கடந்துதான் படம் வெளியாகிறது, சூர்யா சார் இந்த படத்திற்காக நிறைய கொடுத்துவிட்டார்.
இந்த படம் கட்டாயம் வெளியாகும். படம் இன்று மாலை வரும், படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். கருப்பன் வரான் வழி மறிக்காதே என்கிறேன், ஆனால் பலரும் வழி மறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கடந்து படம் வெளியாகும். கடவுள் நம் பக்கம் இருக்கிறார். நல்லதே நடக்கும். இவ்வாறு அழுகையை அடக்கிக்கொண்டு பாலாஜி வெளியிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.