சட்டசபையில் 'ஜனநாயகன்' பற்றி பெயர் குறிப்பிடாமல் பேசிய விஜய்
தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தற்போது நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் விஜய் தற்போது பதிலுரை அளித்து வருகிறார்.
அவரது அரசியல் பயணம் எப்போது ஆரம்பித்தது என்பதிலிருந்து ஆட்சியைப் பிடித்தது வரையிலான பயணம் வரை பேசினார். அதில் திரைப்படங்களில் அவர் அரசியல் பேசியதால் என்ன நடந்தது என்பதையும் சொன்னார்.
அவரது கடைசி படமான 'ஜனநாயகன்' படம் சென்சார் சிக்கலில் சிக்கி ஆறு மாதங்களாகியும் வெளிவராமல் இருக்கிறது. அந்தப் படத்தின் பெயரைக் குறிப்பிடாமல் சட்டமன்றத்தில் அவரது உரையில்,
“நம்மளோட திரைப்படங்கள்ல நம்மளால முடிஞ்ச வரைக்கும் ஊழல் எதிர்ப்பை சொன்னோம், சமூக நீதியை சொன்னோம், கல்விய பத்தி சொன்னோம், அரசியலைப் பத்தி சொன்னோம். அரசியலைப் பத்தி பேசுனதால நம்ம படங்கள் சந்திச்ச, ஏன் இதுவரைக்கும் சந்திக்கிற பிரச்னையை பத்தி எல்லாருக்குமே தெரிஞ்சதுதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
'ஜனநாயகன்' பட சென்சார் சிக்கல் பற்றி இதுவரையில் வெளிப்படையாக எதுவும் பேசியதில்லை. இந்தப் பிரச்சனையில் தேர்தலுக்கு முன்பாக அவருக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் கூட அவர் நன்றி தெரிவிக்கவில்லை.
முதல்வரான பின்பும் கூட 'ஜனநாயகன்' சென்சார் பற்றி அந்தத் துறையையோ, அந்தத் துறையின் அமைச்சரையோ, மத்திய அரசையோ விமர்சிக்காமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.