'ஹபீபி' பார்த்து விட்டு அழுத மகள்: கஸ்துாரிராஜா சொன்ன தகவல்
கஸ்துாரிராஜா நடித்த 'ஹபீபி' படத்தை பார்த்து அவர் குடும்பத்தினர் பாராட்டியுள்ளனர். இது குறித்து கஸ்துாரிராஜா கூறுகையில், ''ஹபீபி படத்தை சமீபத்தில் என் ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து பார்த்தது. அப்போது அப்படியொரு அமைதி. படம் பார்த்த தனுஷ் 'சூப்பராக நடிச்சு இருக்கீங்க. என்னை கவுரவப்படுத்துகிற மாதிரி நடிச்சு இருக்கீங்க' என்று பாராட்டினார். என் மூத்த மகளான டாக்டர் விமலகீதா டக்கென எழுந்து சென்றுவிட்டார், வெளியில் அரைமணி நேரம் அழுதார். ஏன் இப்படிப்பட்ட படங்களில் நடிக்குறீங்க என்றார்.
நான் இறப்பு காட்சியில் நடித்தது அவருக்கு பிடிக்கவில்லை. என் மருமகன் கூட பாராட்டினார். பல ஊர்களில் இருந்து போனில் பாராட்டு வருகிறது. என் 48 ஆண்டு சினிமா வாழ்க்கையில் இப்படிப்பட்ட பாராட்டை கேட்டது இல்லை. அடுத்து படங்களில் நடிக்கலாம். இந்த படத்தில் என்னுடன் மகனாக, மருமகளாக, உறவுக்காரர்களாக நடித்தவர்களுக்கு நன்றி'' என்றார்.