'திரிஷ்யம்' படம் போலவே நடிகைக்கு நிஜத்திலும் நடந்தது ; எப்ஐஆர் மூலம் வெளியான உண்மை
மலையாள திரையுலகில் தற்போது ஸ்வேதா மேனன் தலைமையிலான நடிகர் சங்கம் பரபரப்பான சர்ச்சைகளில் இடம் பிடித்து வருகிறது. கடந்த மாதம் 'திரிஷ்யம்' பட நடிகை அன்சிபா ஹாசன், சங்க நிர்வாகிகளான நடிகர் டினி டாம் மற்றும் நடிகை லட்சுமி பிரியா குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததுதான் இதன் துவக்கப் புள்ளியாக அமைந்தது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இருவர் மீதும் காவல் நிலையத்தில் அன்சிபா புகார் அளித்திருந்தார். அதில், நடிகை லட்சுமி பிரியா திருப்புணித்துறை காவல் நிலையத்தில் தன் மீது புகார் அளித்து, விசாரணை என்கிற பெயரில் அங்கே வரவழைத்து, பெண் எஸ்.ஐ. ரேஷ்மாவின் உதவியுடன் தன்னை துன்புறுத்தினார் என்று அன்சிபா குற்றம் சாட்டி பதிலுக்கு புகார் அளித்தார்.
ஆரம்பத்தில் அந்த புகார் கண்டுகொள்ளப்படவில்லை என்றாலும், பின்னர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி லட்சுமி பிரியா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த எஸ்.ஐ.ரேஷ்மா ஆகியோர் மீது எப்ஐஆர். பதியப்பட்டது. தற்போது எப்ஐஆர்-ல் குறிப்பிடப்பட்ட விஷயங்கள் வெளியாகி உள்ளன. அதில், காவல் நிலையத்தில் விசாரணைக்கு வரவழைக்கப்பட்ட அன்சிபாவிடம், புகார் அளித்த லட்சுமி பிரியாவே விசாரணை நடத்தியுள்ளார். இதற்கு பெண் எஸ்.ஐ. ரேஷ்மா உடந்தையாக இருந்துள்ளார். மேலும் அந்த சமயத்தில் ஹன்சிபாவை சிறையில் அடைத்து விடுவதாகவும் ரேஷ்மா மிரட்டியுள்ளார். அது மட்டுமல்ல, அவர் சொல்லாத விஷயங்களை ஆவணங்களாக தயாரித்து அதில் ஹன்சிபாவை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்கள் என்றும், லஷ்மி பிரியாவிடம் மன்னிப்பு கேட்பது போன்று கடிதம் எழுதித் தர கட்டாயப்படுத்தப்பட்டார் என்றும் அந்த எப்ஐஆர்.-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகை அன்சிபா ஹாசன் 'திரிஷ்யம்' படத்தில் மோகன்லாலின் மூத்த மகளாக நடித்துள்ளார். அந்த படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில், போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையில் பெண் போலீஸ் அதிகாரியால் கடுமையாக துன்புறுத்தப்படுவார். நிஜத்திலும் தற்போது அதேபோன்று ஒரு சூழலை அவர் சந்தித்துள்ளார் என்பது இந்த எப்ஐஆர்.-ல் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது.