பிளாஷ்பேக்: எம் ஜி ஆருக்காக பஞ்சு அருணாசலம் எழுதிய முத்தான முதல் இரண்டு திரைப்படப் பாடல்கள்
இன்று (09 ஆகஸ்ட்) பஞ்சு அருணாசலம் அவர்களின் 10வது நினைவு நாள்.
தமிழ் திரையுலகின் உச்ச நடிகர்களாக இருந்த எம் ஜி ஆர், சிவாஜி ஆகிய இருவருக்கும் அவரவர்களுக்கென பிரத்யேக இயக்குனர்கள் இருந்திருந்த அன்றைய சினிமா உலகில், இருவரையும் வைத்து பல வெற்றித் திரைப்படங்களைத் தந்த இயக்குனர்களும் இருந்ததுண்டு. இவ்விருவரையும் வைத்து இயக்கி, வெற்றி கண்ட பி ஆர் பந்துலு, டி ஆர் ராமண்ணா போன்ற இயக்குனர்களின் வரிசையில் பார்க்கப்படும் மற்றுமொரு வெற்றி இயக்குநர்தான் இயக்குநர் கே சங்கர். “பணத்தோட்டம்”, “சந்திரோதயம்”, “குடியிருந்த கோயில்”, “அடிமைப் பெண்”, “பல்லாண்டு வாழ்க”, “உழைக்கும் கரங்கள்” என எம் ஜி ஆரை வைத்து தொடர் வெற்றித் திரைப்படங்களை வழங்கிய இவரது இயக்கத்தில் எம் ஜி ஆர் நடித்து, 1965ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம்தான் “கலங்கரை விளக்கம்”.
“வெர்ட்டிகோ” என்ற அமெரிக்க ஆங்கில திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் நாயகனாகவும், பி சரோஜாதேவி நாயகியாகவும் நடித்திருந்தனர். ஆக்ஷன் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்திருந்தன. கவியரசர் கண்ணதாசனிடம் பல வருடங்களாக அவரது உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பஞ்சு அருணாசலம், “மணமகளே மருமகளே வா வா” என்ற “சாரதா” திரைப்படத்தின் பாடலை எழுதியதன் மூலம் ஒரு பாடலாசிரியராக அறிமுகமாகி, “காட்டு ரோஜா”, “நானும் ஒரு பெண்”, “அம்மா எங்கே?”, “வல்லவனுக்கு வல்லவன்” போன்ற ஓரிரு திரைப்படங்களில் பாடல்கள் எழுதிவந்த நிலையில், எம் ஜி ஆருக்காக இவர் எழுதிய முதல் திரைப்படம்தான் இந்த “கலங்கரை விளக்கம்”.
“சங்கே முழங்கு… சங்கே முழங்கு…” என்ற பாரதிதாசனின் பாடலோடு, கவிஞர் வாலியின் பாடல்களும் இடம் பெற்றிருந்த இத்திரைப்படத்தில், இவர் எழுதிய இரண்டு பாடல்கள் இன்றுவரை தமிழ் திரையிசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. “பொன்னெழில் பூத்தது புது வானில்”, “என்னை மறந்ததேன் தென்றலே” என்ற இந்த இரண்டு காலத்தால் அழியா காவியப் பாடல்களை எம் ஜி ஆரின் “கலங்கரை விளக்கம்” திரைப்படத்திற்காக எழுதி, கலையுலகில் ஒரு நிலையான பாடலாசிரியராக வலம் வந்தார் பஞ்சு அருணாசலம். வரலாற்று நாயகன் நரசிம்ம பல்லவராக எம் ஜி ஆரும், சிவகாமியாக பி சரோஜாதேவியும் தோன்றி நடித்திருந்த அந்தப் பாடல் காட்சியும், இவரது அற்புதமான பாடல் வரிகளும், பார்ப்போரின் கண்களுக்கும், செவிகளுக்கும் இனிய விருந்தாய் இன்றும் இருந்து வருகின்றது. பின்னர் 'தேவர் பிலிம்ஸ்' நிறுவனத்திற்காக எம் ஜி ஆர் நடித்து வெளிவந்த “கன்னித்தாய்” திரைப்படத்தின் மொத்தப் பாடல்களையும் இவரேதான் எழுதியிருந்தார்.
ஒரு கதாசிரியராக, தயாரிப்பாளராக, இயக்குநராக கலையுலகில் பன்னெடுங்காலம் பயணித்து, பல்வேறு வெற்றிகளைக் குவித்த ஒரு பன்முகத் திரைக்கலைஞரான பஞ்சு அருணாசலம் அவர்கள் ஒரு தலைசிறந்த பாடலாசிரியராகவும் பரிமளித்து பலநூறு பாடல்களை நமக்காக படைத்துவிட்டு சென்றிருக்கின்றார். அவரது நினைவு நாளான இன்று, எம் ஜி ஆருக்காக அவர் எழுதிய இந்த முதல் இரண்டு பாடல்களான “பொன்னெழில் பூத்தது புதுவானில்”, “என்னை மறந்ததேன் தென்றலே” என்ற “கலங்கரை விளக்கம்” திரைப்படப் பாடல்களை அவரது நினைவு நாளான இன்று நாம் நினைவு கொள்வதில் பெருமை கொள்வோம்.