கோட்டயத்தில் இருந்தபோது கோட்டை விட்டேன் ; சூர்யா குறித்து மமிதா பைஜூ சுவாரஸ்ய தகவல்
மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' படம் மூலம் பிரபலமான மமிதா பைஜூ, தமிழில் மளமளவென முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். விஜய்யுடன் இணைந்து நடித்த 'ஜனநாயகன்' படம் சமீபத்தில் வெளியான நிலையில், அடுத்ததாக சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இதன் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கொச்சியில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மமிதா பைஜூ பேசும்போது, கடந்த 2015ம் ஆண்டு நடிகர் சூர்யா கொச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார். அப்போது நான் எட்டாவது படித்துக் கொண்டிருந்தேன். எப்படியாவது சூர்யாவை நேரில் பார்த்துவிட வேண்டும் என ஆசைப்பட்டேன். ஆனால் சிறு வயது மாணவி என்பதாலும், கோட்டயத்தில் இருந்து கொச்சி பயணம் அப்போது எனக்குப் பெரிய விஷயம் என்பதாலும் என் பெற்றோர் அதற்கு மறுத்துவிட்டனர்.
அதே சமயம் என்னுடைய அண்ணன் கொச்சி சென்று அந்த நிகழ்வில் கலந்துகொண்டு சூர்யாவுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டு அதை வீட்டாரிடமும் நண்பர்களிடமும் காட்டி பெருமைப்பட்டுக்கொண்டார். அந்த படத்தைப் பார்த்தபோது என்னால் போக முடியவில்லை என்று நான் வருத்தப்பட்டேன். ஆனால் தற்போது காலம் தான் எவ்வளவு மாறிவிட்டது. அன்று நேரில் சூர்யாவைப் பார்க்கக்கூட அனுமதி கிடைக்காத நிலை மாறி, இன்று அவருடைய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு எனக்குக் கிடைத்திருப்பது கடவுளின் ஆசீர்வாதம் தான் என்று கூறியுள்ளார்.