PUBLISHED ON : செப் 15, 2025 12:00 AM

எஸ்.செபஸ்டின்,
சிவகாசியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஜாதி ஒழிய
வேண்டுமானால், அனைத்து வகையான இடஒதுக்கீட்டையும் ஒழிக்க வேண்டும்.
சான்றிதழ்களில் ஜாதிப்பெயர் இருக்கக் கூடாது...' என்று இப்பகுதியில் வாசகர்
ஒருவர் எழுதியிருந்தார்.
இது ஜாதி துவேஷத்தை அதிகப்படுத்தி,
பட்டியலின மக்களை அடிமைப்படுத்தும் செயலை ஊக்குவிக்குமே அன்றி, இதனால்
ஜாதிகள் ஒழியாது. காரணம், ஒதுக்கீடு இருப்பதால் மட்டுமே தாழ்த்தப்பட்ட
மக்கள் மத்திய - மாநில அமைச்சர்களாகவும் ஐ.பி.எஸ்., - ஐ.ஏ.எஸ்., -
ஐ.ஆர்.எஸ்., அதிகாரிகளாகவும், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களாகவும்
அதிகாரத்தில் அமர முடிகிறது.
இடஒதுக்கீடு இல்லையென்றால், பட்டியலின மக்கள் இச்சமூகத்தில் அடிமைகளாக தங்களது குலத்தொழிலை மட்டுமே செய்ய முடியும்.
எனவே, இட ஒதுக்கீட்டை காலி செய்யவேண்டுமென்று கூறுவோர், ஜாதியை
ஒழிப்பதற்கு வழி கூறுபவர்கள் அல்ல; பட்டியலின மக்களின் முன்னேற்றத்தின்
மீது வன்மம் கொண்டவர்களே!
ஏனென்றால், அந்தக் கடவுளே இறங்கி வந்தாலும் ஜாதியை ஒழிக்க முடியாது. காரணம், ஜாதி என்பது தொன்று தொட்டு வரும் ரத்த உறவு.
ஒவ்வொரு ஜாதிக்கும், குலதெய்வ வழிபாடு முதல் திருமணம் மற்றும் இறப்பு என அனைத்து விதமான சடங்குகளும் வித்தியாசப்படும்.
எனவே, ஜாதியை ஒழித்துவிடலாம் என்று கூறுவதெல்லாம் அரசியல் ஏமாற்று வேலை.
அதேநேரம், மத்திய - மாநில அரசுகள் நினைத்தால் கடுமையான சட்டங்களால் ஜாதி
துவேஷத்தை போக்கி விட முடியும்.
தற்போது, பட்டியலினம் நீங்கலாக
பிற ஜாதியினர், ஜாதி துவேஷம் இன்றி பழகுவது போன்று, தலித் மக்களிடமும் மேல்
- கீழ் ஜாதி பேதம் பாராமல், சக மனிதர்களாக எண்ணி மதித்து நடந்தால் போதுமே!
வேண்டாம் இலவசம்!
பொ.ருக்மணி தேவி, பாம்பனார், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பசியால் வாடும் ஒருவனுக்கு உணவாக மீனை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுத்து விட்டால் அவனே மீன்பிடித்து, பசியை போக்கிக் கொள்வதுடன், அவனை சார்ந்தோரின் பசியையும் போக்குவான்.
அரசின் நோக்கமும் வேலை வாய்ப்பை உருவாக்கி, மக்களை உழைக்க வைத்து, அதன் வாயிலாக அவர்கள் முன்னேற வழிகாட்ட வேண்டும். அதுதான் நிரந்தர முன்னேற்றம். அப்படி முன்னேறுவது தான் அவர்களுக்கும், நாட்டிற்கும் நல்லது.
காமராஜர், தன் ஆட்சிக் காலத்தில் கல்வி மற்றும் மருத்துவம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவற்றை மட்டும் இலவசமாக வழங்கினார். அதேநேரம், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் எந்த இலவச திட்டத்தையும் அறிவிக்கவில்லை.
ஆனால், திராவிட கட்சி ஆட்சியாளர்கள், தங்களை வள்ளல்களாக காட்டிக்கொள்ள, தொலைநோக்கு சிந்தனையின்றி, தேர்தல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாக வைத்து, இலவசங்களை கொடுத்து மக்களை கையேந்துபவர்களாக வைத்துள்ளனர்.
கவர்ச்சியான இலவச திட்டங்களுக்காக இதுவரை செலவிட்ட பணத்தை வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிட்டிருந்தால், வறுமை என்றோ ஒழிந்திருக்கும்; 10 லட்சம் கோடி ரூபாய் கடனும் வந்திருக்காது. இப்போது இருப்பதை விட, தமிழகம் பல மடங்கு வளர்ச்சி அடைந்திருக்கும்.
'என்னை தேர்தலில் வெற்றி பெற வைத்தால், உங்களுக்கு இலவசமாக ஏதாவது கொடுப்பேன்' என்று அரசியல்வாதிகள் சொன்னால், மக்கள் யோசிக்க வேண்டும். இலவசத்தை காட்டி, ஆளுவோர் நம்மிடம் கூடுதல் உரிமை எடுக்க விடாதீர்கள்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இலவசங்களுக்கு எதிரான கருத்தை சமீபத்தில் கூறியிருந்தார்.
தமிழகத்தில் நிலவும் இந்த இழிவான இலவச கலாசாரத்தை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மட்டும்தான் கடுமையாக விமர்சித்து வருகிறார். வேறு எந்த கட்சியும் இதுகுறித்து பேசுவதில்லை.
எனவே, இன்றைய சூழ்நிலையில் சீமானைப் போல், புதிதாக வந்துள்ள த.வெ.க., தலைவர் விஜயும் இலவச கலாசாரத்திற்கு எதிராக செயல் பட்டால் வரவேற்கத்தக்கதே!
இலங்கை செல்வது எப்போது?
ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இலங்கை நலனுக்காக, கச்சத்தீவைப் பாதுகாக்கும் பொறுப்பை நிறைவேற்றுவேன்; எந்த செல்வாக்கிற்கும் அடிபணிய மாட்டேன்.
'இதுவரை, இந்திய மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் மீன் பிடித்து சிக்கினால், மனிதாபிமான அடிப்படையில் அவர்கள் படகுகளை திருப்பி அளித்து வந்தோம். இனி அதுபோல் நடக்காது' என்று கூறியுள்ளார், இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே!
மத்திய அரசு இலங்கைக்கு ஏராளமாக நிதி உதவி அளித்துள்ளது. ஆனாலும், தமிழக மீனவர்கள் விஷயத்தில் இலங்கை அரசு காட்டும் கெடுபிடிகள் ஏராளம்!
கடலில் எங்கு மீன் பிடிக்கிறோம் என்பதை அறிய முடியாமல், இந்திய எல்லை தாண்டி சென்று விடும் மீனவர்கள், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாவதுடன், அவர்களது படகுகளும் நாசப்படுத்தப்படுகின்றன.
இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள், 10 பேருக்கு, 14.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது, அந்நாட்டு நீதிமன்றம்.
அதனால், இனி இலங்கைக்கு கொடுக்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு நிறுத்தி, அந்த நிதியை படகுகளை இழக்கும் மீனவர்களுக்கு இழப்பீடாக கொடுக்கலாம்.
கடந்த 1974ல் இலங்கைக்கு கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போது, 'இலங்கை பிரதமர் பண்டார நாயக்கின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி' என்று பேசப்பட்டது. அதேநேரம், கச்சத்தீவை தாரைவார்த்த முன்னாள் பிரதமர் இந்திரா, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த தோல்வி என்றே அதை கூறலாம்!
இந்நிலையில், 'ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பது போல், கச்சத்தீவை தாரைவார்த்தவர்களே தாங்கள் தான் என்பதை மறந்து, இப்போது தமிழக மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர், காங்கிரஸ் மற்றும் தி.மு.க.,வினர்!
அன்னிய முதலீட்டுக்காக கடல் கடந்து போய் முதலீடுகளை ஈர்த்து வரும் தமிழக முதல்வர், அருகில் உள்ள இலங்கைக்கு பயணம் செய்து, மீனவர்கள் பிரச்னையை எப்படி சுமுகமாக கையாள்வது என்பது குறித்தும் பேச்சு நடத்திவிட்டு வரலாமே!