/
புகார் பெட்டி
/
கோயம்புத்தூர்
/
மழைக்கு ஒழுகும் அரசு பஸ்கள்; பயணியர் அதிருப்தி
/
மழைக்கு ஒழுகும் அரசு பஸ்கள்; பயணியர் அதிருப்தி
ADDED : ஜூன் 16, 2025 08:28 PM

மின்கம்பம் சேதம்
கிணத்துக்கடவு, பொன்மலை வேலாயுத சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள இருசக்கர வாகன ஸ்டாண்ட் அருகே இருக்கும் மின்கம்பம் சேதமடைந்துள்ளது. இந்த கம்பத்தில் கான்கிரீட் பூச்சுகள் எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் இருப்பதால், மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
- ஆறுச்சாமி, கிணத்துக்கடவு.
போக்குவரத்து பாதிப்பு
வால்பாறை - நடுமலை செல்லும் போது அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ரோட்டோரத்தில் வாகனத்தை நிறுத்தும் ஓட்டுநர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவிப்பிரியா, வால்பாறை.
ரோட்டில் கழிவுநீர்
கிணத்துக்கடவு, அரசம்பாளையம் பிரிவில் ரோட்டோரம் அதிகளவு கழிவுநீர் செல்கிறது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர், இதை கவனித்து கழிவுநீர் வெளியேற வடிகால் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரஞ்சித், கிணத்துக்கடவு.
ஒழுகும் அரசு பஸ்
பொள்ளாச்சி --- கோவை வழித்தடத்தில் இயங்கும் சில அரசு பஸ்களில், மழை நேரத்தில் ஜன்னல் ஓரம் உள்ள இருக்கைகள் வழியாக மழை நீர் உள்ளே ஒழுகுவதால் பயணியருக்கு சிரமம் ஏற்படுவதுடன், நீண்ட நேரம் நின்று கொண்டே பயணிக்கின்றனர். இதை போக்குவரத்து கழக அதிகாரிகள் கவனித்து சரி செய்ய வேண்டும்.
-- தனபால், பொள்ளாச்சி.
விபத்து அபாயம்
பொள்ளாச்சி, குமரன் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மூடி சேதம் அடைந்திருப்பதால், வாகன ஓட்டுநர்கள் பலர் சிரமத்துடன் அவ்வழியில் பயணிக்கின்றனர். இரவு நேரத்தில் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து, பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
- டேனியல், பொள்ளாச்சி.
மேம்பாலம் கட்டணும்
உடுமலை - கொழுமம் ரோட்டில், ரயில்வே மேம்பாலம் இல்லாததால், கேட் மூடப்படும் போது, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு மேம்பாலம் அமைக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
எரியாத தெருவிளக்குகள்
உடுமலை 32வது வார்டு ருத்தரப்பநகர் 3வது வீதியில் கடந்த ஒரு மாதமாக தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால், பொதுமக்கள் மிகுந்து சிரமத்துக்குள்ளாகின்றனர். இதை நகராட்சியினர் சரிசெய்ய வேண்டும்.
- பஷீர், உடுமலை.
குடிநீர் தட்டுப்பாடு
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சிகளில், கூட்டு குடிநீர் திட்டத்தில் தொடர்ந்து மின்வெட்டு பிரச்னை ஏற்படுவதால், கிராமங்களில் குடிநீர் தட்டுபாடு அதிகரித்துள்ளது. கிராம ஊராட்சிகளில் 13 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- அருண்குமார், பெரியகோட்டை.
போலீசார் கவனத்துக்கு
உடுமலை - மூணார் ரோட்டில் இயக்கப்படும் தனியார் பஸ்கள் அதிகமான வேகத்துடன் செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் செல்வதால் வாகன ஓட்டுநர்கள் பீதியடைகின்றனர். பஸ்சில் பயணிக்கும் பயணிகளும் அச்சத்துடன் செல்கின்றனர். போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சசிபிரகாஷ், மானுபட்டி.
ஓவர் லோடு வாகனங்கள்
உடுமலை, பொள்ளாச்சி ரோட்டில் சரக்கு வாகனங்கள் அதிகமான கனத்துடன் முறையான பாதுகாப்பில்லாமல் செல்கின்றன. இதனால் பின்னால் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழல் ஏற்படுகிறது.
- சிவக்குமார், உடுமலை.
'லொள்' தொல்லை
உடுமலை -- பழநி ரோட்டில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம், உடுமலை.