ADDED : ஜூன் 24, 2025 10:01 PM

பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காடு, மலப்புரம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்களிடம், வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, பணம் பெற்று மோசடி நடந்துள்ளது. பாதிக்கப்பட்டோர், இது குறித்து, குழல்மன்னம் போலீசில் புகார் அளித்தனர்.
வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மனோஜ் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், பணத்தை ஏமாற்றியவர் பல்லன்சாத்தனூர் பகுதியைச் சேர்ந்த ஆசிப், 38, என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நேற்று அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் கூறுகையில், ''வேலைவாய்ப்பு ஆலோசனை மையம் நடத்தி, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து, புகார்தாரர்களிடம் இருந்து, 50 ஆயிரம் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரை பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக ஏராளமான புகார்கள் வந்து கொண்டுள்ளன. முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என்றார்.