sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

விமான பயண பாதுகாப்பை ஆய்வு செய்ய பறக்கும் எம்.பி.,க்கள்! வரும் 29ம் தேதி சிக்கிம் சென்றுவர முடிவு

/

விமான பயண பாதுகாப்பை ஆய்வு செய்ய பறக்கும் எம்.பி.,க்கள்! வரும் 29ம் தேதி சிக்கிம் சென்றுவர முடிவு

விமான பயண பாதுகாப்பை ஆய்வு செய்ய பறக்கும் எம்.பி.,க்கள்! வரும் 29ம் தேதி சிக்கிம் சென்றுவர முடிவு

விமான பயண பாதுகாப்பை ஆய்வு செய்ய பறக்கும் எம்.பி.,க்கள்! வரும் 29ம் தேதி சிக்கிம் சென்றுவர முடிவு


UPDATED : ஜூன் 25, 2025 06:27 AM

ADDED : ஜூன் 25, 2025 04:55 AM

Google News

UPDATED : ஜூன் 25, 2025 06:27 AM ADDED : ஜூன் 25, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து பயணியர் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில், விமான பயணங்கள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்பதை ஆய்வு செய்ய, தலைநகர் டில்லியில் இருந்து வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்கு, வரும் 29ம் தேதி, 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் விமானத்தில் பயணம் மேற்கொள்ள, பார்லி., நிலைக்குழு எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

குஜராத்தின் ஆமதாபாதில், 'ஏர் இந்தியா' விமானம் கடந்த 12ம் தேதி விழுந்து நொறுங்கியதில், விமானத்தில் இருந்த 141 பயணியர் உட்பட, 275 பேர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இந்த கோர விபத்து குறித்து விசாரிக்க, மத்திய உள்துறை செயலர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், விமானத்தின் கருப்பு பெட்டி கைப்பற்றப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பாதுகாப்பு அம்சம்


சமீபகாலமாக, பல விமானங்கள் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதும், எரிபொருள் உள்ளிட்ட பிரச்னைகளுக்காக, அவசரமாக தரையிறக்கப்படுவதும் தொடர்கிறது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை பார்லி., நிலைக்குழு கையில் எடுத்துள்ளது. விமான பயணங்களில் என்ன தான் நடக்கிறது என்பதை அறிய அக்குழு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து, சுற்றுலா, கலாசாரம் ஆகியவற்றுக்கான பார்லி., நிலைக்குழுவுக்கு, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜ்யசபா மூத்த எம்.பி., சஞ்சய் குமார் ஜா தலைவராக இருக்கிறார்.

இந்த குழுவில் பா.ஜ., மூத்த எம்.பி.,யும், விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சரும், விமானியுமான ராஜிவ் பிரதாப் ரூடி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

விமான போக்குவரத்தில் தொடர்ச்சியாக ஏற்படும் சிக்கல்கள், விபத்துகள் குறித்து ஆய்வு செய்யவுள்ள இந்த பார்லி., நிலைக்குழு, விமான பயணங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் கேட்டறிய உள்ளது.

விமான பயணத்தில் ஏற்படும் தொடர் தடங்கல்களை அடுத்து பயணியர் மத்தியில் குழப்பமும், அச்சமும் ஏற்பட்டுள்ளது.

இதை போக்கும் வகையில், விபத்துகளின் போது தொழில்நுட்ப ரீதியாக என்ன தவறு நடக்கிறது என்பது குறித்தும், விமான பயணங்களில் உள்ள சவால்கள் மற்றும் இதில் விமானிகளின் பங்களிப்பு உள்ளிட்ட பல விஷயங்களை ஆய்வு செய்து, அடுத்த மாதம் துவங்கும் மழைக்கால கூட்டத்தொடரில் அறிக்கை தாக்கல் செய்ய, இந்த குழு தீர்மானித்துள்ளது.

நேரடி அனுபவம்


இதற்காக, ஜூலை முதல் வாரத்தில் பார்லி., நிலைக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், விமானப் பாதுகாப்பு அதிகார ஆணையம், மத்திய தொழிலக பாதுகாப்பு படை, போயிங் மற்றும் ஏர் இந்தியா நிறுவனங்களின் உயரதிகாரிகள் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

விபத்து குறித்த விபரங்களையும், விமானப் பயணங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வழிகள் உள்ளனவா என்பது குறித்தும், அவர்களிடம் கேட்டறிய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவதேவி, உத்தராகண்டில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட பல்வேறு புனித தலங்களில், சுற்றுலா பயணியருக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்கி வரும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், முக்கிய ஆலோசனைகளை பெற, விமானப் போக்குவரத்து முன்னாள் அமைச்சர்கள், ஓய்வுபெற்ற அனுபவம் வாய்ந்த விமானிகள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன், விமானப் பயணங்களில் உள்ள சிரமங்கள், சிக்கல்கள் குறித்து, நிலைக்குழு உறுப்பினர்களான எம்.பி.,க்களே நேரடியான அனுபவத்தை பெறும் நோக்கில், மற்றொரு முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விபத்துகளால் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானத்தில், பயணம் மேற்கொள்வது என, எம்.பி.,க்கள் முடிவு செய்துள்ளனர்.

அதற்காக, டில்லியில் இருந்து சிக்கிம் தலைநகர் கேங்டாக்கிற்கு ஏர் இந்தியா விமானத்தில், இந்த பார்லி., நிலைக்குழு எம்.பி.,க்கள், வரும் 29ம் தேதி பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

டி.ஜி.சி.ஏ., அதிருப்தி

ஆமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து, விமான நிலையங்கள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களின் விமானங்களில் டி.ஜி.சி.ஏ., எனப்படும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விரிவான ஆய்வு நடத்தியது.இந்நிலையில் டி.ஜி.சி.ஏ., நேற்று வெளியிட்ட அறிக்கை:நாடு முழுதும் விமான நிறுவனங்கள், விமான நிலையங்களில் பராமரிப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. ஒரு சில விமான நிலையங்களில், டிராலிகள் போன்ற தரை கையாளும் உபகரணங்கள், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. விமானங்களுக்கு தேவையான கருவிகள் கிடைக்கும் கடைகளும் முறையாக இயங்கவில்லை. ஒரு குறிப்பிட்ட விமான நிலையத்தில், ஓடுபாதையின் மையக்கோடு மங்கலாக உள்ளது. மூன்று ஆண்டுகளாக தரவுகள் புதுப்பிக்கப்படவில்லை. மேலும், விமான நிலையத்தைச் சுற்றி பல புதிய கட்டுமானங்கள் இருந்தபோதும் எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. விமான பராமரிப்பில்,​ பணி உத்தரவு பின்பற்றப்படவில்லை. சில இடங்களில், விமான பராமரிப்பு இன்ஜினியர் கோளாறு சரிசெய்வதை கவனிக்கவில்லை. விமானத்தில் உள்ள குறைபாடுகள் தொழில்நுட்ப பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை. மேலும், விமானத்தில் இருக்கைகளுக்கு அடியில் உயிர்காக்கும் கவசங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. இந்த குறைபாடுகளை சரிசெய்யும்படி, சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்கள் மற்றும் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



- நமது டில்லி நிருபர் -






      Dinamalar
      Follow us
      Arattai