பஹல்காமில் ராணுவம் இல்லாதது ஏன்? எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு விளக்கம்
பஹல்காமில் ராணுவம் இல்லாதது ஏன்? எதிர்க்கட்சிகளிடம் மத்திய அரசு விளக்கம்
ADDED : ஏப் 26, 2025 12:46 AM

புதுடில்லி: ஜம்மு --- காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பஹல்காமின் 'பைசரன் பசுமை பள்ளத்தாக்கு' பகுதியில் ராணுவ பாதுகாப்பு இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம், மத்திய அரசு ஏற்பாடு செய்த அனைத்து கட்சி கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, நட்டா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய உளவுத் துறை இயக்குநர் டபன் தேகா, தாக்குதல் பற்றி 20 நிமிடம் விளக்கம் அளித்தார்.
அப்போது, தாக்குதல் நடந்த பைசரன் பகுதியில் ராணுவ வீரர்கள் யாரும் இல்லாதது குறித்து, ராகுல், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அரசு தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கம்:
ஜம்மு - -காஷ்மீரில் ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் துவங்கும் அமர்நாத் யாத்திரைக்கு முன், பைசரன் பகுதியில் பாதுகாப்பு போடப்படும். அப்போது தான், அந்த பாதை அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும்.
அமர்நாத் குகை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வழியில் பைசரனில் ஓய்வெடுப்பதற்கு வசதியாக, அவர்களின் பாதுகாப்புக்காக படையினர் நிறுத்தப்படுவர்.
ஆனால், அமர்நாத் புனித யாத்திரை பாதுகாப்பு பணிகளுக்காக படையினரை அணி திரட்டும் முன், அந்த பகுதியில் இருக்கும் உள்ளூர் சுற்றுலா நிறுவனத்தினர், ஏப்., 20 முதல், சுற்றுலா பயணியரை பைசரனுக்கு அழைத்து செல்லத் துவங்கியுள்ளனர்.
சுற்றுலா பயணியர் வருவதை, உள்ளூர் நிர்வாகமும் தெரிவிக்கவில்லை. இதனால், பைசரனுக்கு ராணுவத்தினர் அனுப்பப்படவில்லை.
இவ்வாறு விளக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதுபோல, 'நம்மிடம் போதுமான அளவுக்கு சேமிப்பு வசதி இல்லாமல் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது ஏன்' எனவும் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்தமத்திய அரசு அதிகாரிகள், 'இது, பாகிஸ்தானுக்கு அளிக்கப்படும் சமிக்ஞை. அதாவது, மிகக் கடுமையான நடவடிக்கையை இந்தியா எடுக்கும் என்றும், எதிர்காலத்தில் இந்தியாவின் நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற வலுவான செய்தியை பாகிஸ்தானுக்கு தெரிவிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது' என தெரிவித்தனர்.