/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முதல்வர் கோப்பை மாநில தடகள, கிரிக்கெட் வீரர்கள் 'அப்செட்'
/
முதல்வர் கோப்பை மாநில தடகள, கிரிக்கெட் வீரர்கள் 'அப்செட்'
முதல்வர் கோப்பை மாநில தடகள, கிரிக்கெட் வீரர்கள் 'அப்செட்'
முதல்வர் கோப்பை மாநில தடகள, கிரிக்கெட் வீரர்கள் 'அப்செட்'
ADDED : அக் 12, 2025 05:09 AM
மதுரை : மதுரையில் நடந்த முதல்வர் கோப்பைக்கான மாநில தடகளப் போட்டியின் போதும், தற்போது நடக்கும் மாநில கிரிக்கெட் போட்டியிலும் வீரர், வீராங்கனைகளுக்கு தங்குமிட வசதி, உணவு வழங்காமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தப்பட்டு ரொக்கமாக பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்திற்கு தடகள, கிரிக்கெட் போட்டிகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லுாரிகளைச் சேர்ந்த தடகள வீரர், வீராங்கனைகளுக்கு மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஒரு வாரத்திற்கு முன் போட்டி நடந்தது.
போட்டி நடப்பதற்கு முதல்நாளே பாதி பேர் மதுரை வந்து வந்து சேர்ந்தனர், மீதிபேர் அதிகாலை வந்தனர். அனைவரையும் நேரடியாக ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு இரண்டு வேன்களில் அழைத்து வந்த எஸ்.டி.ஏ.டி., அலுவலர்கள் தங்குமிட வசதி செய்யவில்லை. மைதானத்திலேயே வீராங்கனைகள் உடை மாற்றி நேரடியாக போட்டியில் பங்கேற்றனர். முதல்நாளே தோற்றவர்களுக்கு தங்குமிடம் தராமல் அப்படியே திருப்பி அனுப்பியதாக ஆசிரியர்கள், வீரர், வீராங்கனைகள் குற்றம் சாட்டினர்.
அவர்கள் கூறியதாவது:
போட்டி முடிந்து அறைக்கு திரும்புவதற்கு வாகன வசதியும் செய்யவில்லை. ஆனால் தோற்றவுடன் வேனில் சொந்த ஊருக்கு அனுப்பும் வேலையை கவனமாக செய்தனர் மதுரை அதிகாரிகள்.
மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மதுரை நகரிலிருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள நான்கு கல்லுாரிகளில் நடக்கிறது.
இன்றுடன் (அக்.12) போட்டி முடிகிறது. ஒரு அணி வீரர்களுக்கு 5 அறைகள் வீதம் 38 அணிகளுக்கு 190 அறைகள் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நுாறு அறைகளே பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஒவ்வொரு கல்லுாரியிலும் தலா 4 போட்டிகள் வீதம் 4 கல்லுாரிகளில் மொத்தம் 16 போட்டிகள் முதல்நாள் நடந்தது. இதில் தோற்ற அணி வீரர், வீராங்கனைகளுக்கு தங்குமிடம் தராமல் திருப்பி அனுப்ப முயற்சித்தனர்.
நாங்கள் மதுரை அதிகாரிகளிடம் சண்டையிட்ட போது அவசரமாக சமாதானம் செய்து வேன்களில் ஏற்றி ஊருக்கு அனுப்பினர்.
தினமும் 800 பேருக்கு மூன்று வேளை உணவு தரவேண்டும். ஆனால் முதல்நாள் மட்டும் 550 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.
அடுத்தடுத்த நாட்களில் 300 பேருக்கே உணவு வழங்கப்பட்டது. இப்படி தங்குமிடம், உணவில் பாதிக்கு பாதித் தொகையை மிச்சப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள். உணவு, தங்குமிடம் இரண்டிலும் முறைகேடு செய்த அதிகாரிகள் குறித்து ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி கணக்கு தணிக்கை செய்ய வேண்டும் என்றனர்.
கடந்தாண்டு மாநில கோகோ போட்டி மதுரையில் நடந்த போது வீரர், வீராங்கனைகளுக்கு தரமற்ற உணவு வழங்கப்பட்ட நிலையில் பத்திரிகைகளில் செய்தி வெளியான நிலையில் உணவுப் பிரச்னையை மதுரை அதிகாரிகள் சரிசெய்தனர்.
இந்த புகார் குறித்து ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் (மதுரை) வேல்முருகனிடம் கேட்ட போது, ''எல்லாம் சரியாகவே செய்யப்பட்டிருந்தது. யாரும் புகார் சொல்லவில்லை'' என்றார்.

