ADDED : ஜூன் 24, 2025 11:52 PM

திருப்பூர்; நொய்யல் ஆற்றின் தென்புறத்தில் ஈஸ்வரன் கோவில் வீதி, முத்துசாமி வீதி, ஏற்றுமதியாளர் சங்க வெள்ளி விழா ரோடு ஆகிய மூன்று ரோடுகளையும், வடபுறத்தில், யுனிவர்சல் ரோடு, யூனியன் மில் ரோடு, மின் மயான ரோடு ஆகிய மூன்று ரோடுகளையும் இணைக்கும் வகையில் இந்த பாலம் அமைகிறது.
இந்நிலையில், வடபுறத்தில் பாலம் அமைக்கும் பணி ஓரளவு நிறைவுற்ற நிலையில், அதன் அணுகு சாலை அமைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
உரிய வகையில் அதன் மட்டம் இல்லாமல், திடீரென உயரமாக அமைந்துள்ளது; தனியார் கட்டடங்களுக்கு சாதகமாகவும், போக்குவரத்துக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையிலும், இந்த அணுகு சாலை அமைந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று காலை மாநகராட்சி பொறியாளர்கள் அங்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.
பாலம் வரைபடம் மற்றும் திட்டப் பணி குறித்த கோப்புகளுடன் ஒப்பந்த நிறுவனத்தினருடன் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது.
பொறியாளர்கள் கூறியதாவது:
பாலம் அமைந்துள்ள இடத்தில் அணுகு சாலைகள் பாலத்தின் மையப் பகுதியில் உள்ள மட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படும். மூன்று வீதிகளிலும் தலா 30 முதல் 40 மீட்டர் வரையிலான தொலைவுக்கு சாய்வு தளமாக அணுகு சாலை அமைக்கப்படும்.
அதற்கு ஏற்ப பணிகள் நடக்கிறது. தற்போது கட்டுமானப் பணி நடப்பதால் குறுகிய இடத்தில் மட்டும் ரோடு மட்டம் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் எந்த இடத்திலும் தனி நபர்களுக்கு சாதகமாக பணிகள் செய்யப்படவில்லை.