/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எரிசக்தி செலவை குறைக்கும் தொழில் நுட்பம்; 'அதிதி' திட்டத்தில் 5 சதவீத வட்டி மானியம்
/
எரிசக்தி செலவை குறைக்கும் தொழில் நுட்பம்; 'அதிதி' திட்டத்தில் 5 சதவீத வட்டி மானியம்
எரிசக்தி செலவை குறைக்கும் தொழில் நுட்பம்; 'அதிதி' திட்டத்தில் 5 சதவீத வட்டி மானியம்
எரிசக்தி செலவை குறைக்கும் தொழில் நுட்பம்; 'அதிதி' திட்டத்தில் 5 சதவீத வட்டி மானியம்
ADDED : ஜூன் 24, 2025 11:54 PM
திருப்பூர்; குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்தி, 'அதிதி' திட்டத்தில், 5 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம் என, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில், 30 சதவீத பங்களிப்பு செலுத்தி வருகின்றன. மொத்த ஏற்றுமதியில், 50 சதவீத பங்களிப்பை தொடர்கின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மின்சார பயன்பாட்டை குறைக்கவும், கட்டுப்படுத்தவும், புதிய தொழில்நுட்ப பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. உற்பத்தி செலவை குறைக்க, பல்வேறு வகையான முயற்சியை, பின்னலாடை தொழில்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, மின்சார செலவு, பெட்ரோல் - டீசல் செலவுகளை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அதற்காகவே, சோலார் கட்டமைப்பு நிறுவ, மானியம் வழங்கும் திட்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
மத்திய எரிசக்தி துறை அமைச்சகத்தின், தொழில் மற்றும் நிறுவனங்களில் எரிசக்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் (அதிதி) திட்டத்தில், மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பயன்பாட்டில் சிக்கன தொழில்நுட்பத்தை செயல்படுத்த, 5 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2070ல், கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்கும் இலக்குடன், பல்வேறு நடவடிக்கை துவங்கியுள்ளது. தற்போது, 2030ம் ஆண்டில், 50 சதவீதம் அளவுக்கு, கார்பன் உமிழ்வு குறைப்பு என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வருகின்றனர்.
அதற்காகவே, 'அதிதி' திட்டம் உருவாக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்நகரங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை வழிகாட்டுதலுடன் செயல்படுத்த, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து 'அதிதி' திட்ட மாவட்ட தொழில்நுட்ப ஆலோசகர் அழகிய மணவாளன் கூறுகையில்,''அதிதி' திட்டத்தில், எரிசக்தி சிக்கன தொழில்நுட்பத்தை செயல்படுத்த, குறு, சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீதமும், நடுத்தர நிறுவனங்களுக்கு, 3 சதவீதமும் மானியம் வழங்கப்படும். இத்திட்டம், நடப்பு நிதியாண்டு துவங்கி, 2027 - 28ம் நிதியாண்டு வரை செயல்பாட்டில் இருக்கும். சாய ஆலைகள், ஓ.இ., மில்கள், பின்னலாடை நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம். ஒவ்வொரு தொழில்பிரிவினரும், தங்களது சங்கம் வாயிலாக, இத்திட்டத்தில் விண்ணப்பித்து முன்னுரிமை பெறலாம்,'' என்றார்.