ADDED : ஜூன் 27, 2025 11:25 PM

கோதுமை, கேரட், ரவை, பாதாம், மாம்பழம், பிரெட், பிஸ்கட், பாசிபருப்பு, மஸ்கோத், இளநீர் என்று அல்வாவில் பல வகைகள் உள்ளன. இதில் ஒன்று 'அசோகா அல்வா'. என்ன இது அல்வாவின் பெயரை வித்தியாசமாக உள்ளதே என்று நினைக்கலாம். அசோகா அல்வா தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பிரபலமான ஸ்வீட் ஆக உள்ளது. திருவையாறு பகுதியில் முதன்முதலில் தயாரிக்கப்பட்டது என்று கூறப்படுவதால், திருவையாறு அசோகா அல்வா என்று பெயர் கொண்டு உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நடக்கும் அனைத்து சுபநிகழ்ச்சிகளும் அசோகா அல்வா கண்டிப்பாக இடம்பெறும். இந்த அல்வாவை நமது வீட்டிலும் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை
அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து, முதலில் நெய் ஊற்றாமல் பாசிப்பருப்பு மட்டும் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும். பின், நெய் ஊற்றி வறுத்து குக்கரில் நான்கு கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாசிப்பருப்பை நன்கு வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பு வெந்து சூடு ஆறியவுடன், மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
இதற்கிடையில் குங்குமப்பூவை வெந்நீரில் பத்து நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள். பின், வாணலியை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி, கோதுமை மாவு சேர்த்து கிளறவும்.
நெய்யுடன் சேருவதால் கோதுமை மாவு அடர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். அப்போது மிக்ஸியில் அரைத்த பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும். நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பத்து நிமிடம் கழித்து பார்த்தால் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். இந்த நேரத்தில் இரண்டு கப் அளவு சர்க்கரை சேர்த்து, கொஞ்சமாக நெய் ஊற்றினால், பாசிப்பருப்பும், கோதுமை மாவும் சேர்த்து நெய்யை உறிஞ்சும். இந்த நேரத்தில் கேசரி பவுடர், குங்குமப்பூவை சேர்க்க வேண்டும்.
இதற்கிடையில் இன்னொரு வாணலியில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சையை வறுத்து அல்வா மீது போடுங்கள். கொஞ்சமாக ஏலக்காய் பவுடர் துாவி விடுங்கள். அனைத்தையும் ஒரு முறையும் கிளறி இறக்கினால், சுவையான அசோகா அல்வா ரெடி.
- நமது நிருபர் -