பெரியாறு அணையில் மழை வேண்டி விவசாயிகள் மும்மத பிரார்த்தனை
கூடலுார்; முல்லைப் பெரியாறு அணையில் மழை வேண்டி தமிழக விவசாயிகள் மும்மதத்தினரை அழைத்து தேக்கடி ஷட்டர் அருகே பிரார்த்தனை நடத்தினர்.
தென்மேற்கு பருவமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து ஜூன் 1ல் கம்பம் பள்ளத்தாக்கு முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து ஜூன் 1ல் திறக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரமடையாமல் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் 15 நாட்களுக்கு மேல் ஆகியும் நெல் சாகுபடிக்காக இதுவரை தண்ணீர் திறக்கவில்லை. அணையில் நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே சாகுபடிக்கு நீர் திறக்க முடியும். இன்று காலை 6 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 113.55 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 174 கன அடியாக இருந்தது. தமிழகப் பகுதிக்கு 356 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 1484 மில்லியன் கன அடியாகும்.
தமிழக விவசாயிகள் இன்று காலை தேக்கடி ஷட்டர் அருகே மும்மதத்தினரை அழைத்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். திறவை வாய்க்காலில் நீர் தேங்கியுள்ள பகுதியில் மலர் தூவி வழிபாடு செய்தனர். விவசாயிகள், நீர்வளத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரியாறு அணைக்குச் சென்று அப்பகுதியில் மழை வேண்டி பிரார்த்தனை நடத்துவார்கள். ஆனால் தற்போது தேக்கடி ஷட்டர் வரை மட்டுமே விவசாயிகள் செல்ல கேரள வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். முக்கிய நிகழ்வுக்காக அணைப் பகுதிக்கு விவசாயிகள் செல்ல முடியாத நிலை உள்ளதால் தமிழக விவசாயிகளுக்காக கட்டப்பட்ட அணை குறித்த நிலவரங்களை தெரிய முடியாத நிலை உள்ளது என புலம்பி வருகின்றனர்.