உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்கால் மாங்கனி திருவிழா : அடியார் கோலத்தில் வந்த சிவன்.. மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்

காரைக்கால் மாங்கனி திருவிழா : அடியார் கோலத்தில் வந்த சிவன்.. மாங்கனிகளை வீசி பக்தர்கள் பரவசம்

காரைக்கால்; காரைக்காலில் புகழ் பெற்ற காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமசிவன் அடியார் கோலத்தில் பவழக்கால் விமானத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர். 

   

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்காலில் 63நாயன்மார்களில் பெண் நாயன்மாரும் ஈசனால் அம்மையே என்றழைக்கப்பட்ட ஸ்ரீகாரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் மாங்கனி திருவிழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு மாங்கனி திருவிழா கடந்த 27ம் தேதி விநாயகர் பூஜையுடன் துவங்கியது. மாங்கனித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பரமசிவன் அடியார் கோலத்தில் பத்மாசனத்தமர்ந்து பவழக்கால் விமானத்தில் வீதியுலாவாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி இன்று விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீபிக்ஷாடண மூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மாங்கனிகளை இறைத்து சிவனை வழிபட்டனர். இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.இறைக்கப்படும்  மாங்கனிகளை பக்தர்கள் கூட்டம் சிவனின் பிரசாதமாக கருதி பிடித்து உண்டனர்.சிவபெருமான் பிக்ஷாடண மூர்த்தியாக காரைக்கால் அம்மையார் இல்லத்தில் உணவு அருந்த செல்லும் நிகழ்வினை குறிக்கும் விதமாக இன்றைய நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாங்கனி திருவிழா முன்னிட்டு மூலவர் அருள்மிகு காரைக்காலம்மையார் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாங்கனி திருவிழா முன்னிட்டு புதுச்சேரி அரசு காரைக்கால் மாவட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி,கல்லூரிகளுக்கு உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது. மாங்கனி திருவிழாவை காண அண்டை மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து விழாவை கண்டு ரசித்தனர்.விழாவில் பாதுகாப்பு பணியில் 300க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !