சீர்காழியில் சின்னம்மாள் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அகர திருக்கோவிலக்காவில் நூற்றாண்டுகள் பழமையான சின்னம்மாள் அம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள சின்னம்மாள் அம்பிகையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
இக்கோவிலின் திருப்பணி செய்து முடிக்கப்பட்டு இன்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
இன்று காலை இரண்டாம் காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து 9:30 மணிக்கு மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. தொடர்ந்து பஞ்சமி திதி, சதய நட்சத்திரத்துடன் கூடிய மணி 9:30 முதல் 10:45 மணிக்குள் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத விஷ்ணு பட்டர் தலைமையிலானோர் விமான கலசத்தில் புனித நீர் சேர்த்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.