வடதிருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
காஞ்சிபுரம்: நாயகன்பேட்டையில் உள்ள வடதிருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று விமரிசையாக நடந்தது.
காஞ்சிபுரம் அடுத்த நாயகன்பேட்டையில், வடதிருக்கடவூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் நடந்துவந்த திருப்பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.
கடந்த 2ம் தேதி காலை 9:00 மணிக்கு, கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக யாகசாலை பூஜை தொடங்கியது.
நேற்று காலை 7:30 மணிக்கு நான்காம் கால யாகபூஜையும், காலை 10:45 மணிக்கு மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, வேதவிற்பன்னர்கள், கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றியும் கும்பாபிஷேகம் நடத்தினர்.
தொடர்ந்து விநாயகர், வள்ளி – தெய்வானை சமேத சுப்ரமணியர், பஞ்சகோஷ்டி மூர்த்திகள், நடராஜர் சைவ சமய குரவர்கள் நால்வர் மற்றும் வன்னிமர விநாயகர் சன்னிதிக்கு, புனிதநீர் ஊற்றப்பட்டது.
மாலை 3:00 மணிக்கு மஹா அபிஷேகமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உத்சவமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது .
நாயகன்பேட்டை நடுத்தெரு, சின்ன தெரு, பூர்வீக செங்குந்தர்கள், நால்வர் இறைபணி மன்றம் மற்றும் கிராமத்தினர் இணைந்து, இவ்விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.