காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவர் சிலை சேதம்: கருடசேவை ரத்து
காஞ்சிபுரம்: கா ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வரதர் உற்சவர் சிலை சேதமடைந்துள்ளதால், நேற்று நடைபெறுவதாக இருந்த ஆடி கருடசேவை உத்சவம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், சுவாமி தரிசனம் காண ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். சேதமடைந்த சிலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், வைகாசி பிரமோத்சவத்தின் மூன்றாம் நாள் கருட சேவை உத்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல, ஆனி, ஆடி மாதங்களில் வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை உத்சவம் நடக்கிறது. அதன்படி, ஆனி மாதத்திற்கான ஆனி கருடசேவை உத்சவம், கடந்த மாதம் 25ம் தேதி நடந்தது. ஆடி மாதத்திற்கான ஆடி கருடசேவை உத்சவம், நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணங்களால், ஆடி கருடன் உத்சவம் நடைபெறாது என, கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால், ஆடி கருடசேவை உத்சவத்தை காண ஆவலாக இருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில் உதவி ஆணையரும், நிர்வாக அறங்காவலருமான சீனிவாசன் கூறியதாவது: கடந்த 3ம் தேதி ஜேஷ்டாபிஷேகம் செய்த போது, வரதராஜ பெருமாள் உற்சவர் சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சிலையை சீரமைக்க வேண்டும் என, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் ஸ்தபதி மூலம் சிலை சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.