உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிருங்கேரி சாரதா பீடத்தில் சாதுர்மாஸ்ய சங்கல்பம்; வியாச பூஜை செய்த சுவாமிகள்

சிருங்கேரி சாரதா பீடத்தில் சாதுர்மாஸ்ய சங்கல்பம்; வியாச பூஜை செய்த சுவாமிகள்

ஆடி மாதத்தின் பவுர்ணமி தினமான நேற்று சிருங்கேரி ஜகத்குரு பாரதீ தீர்த்த சுவாமிகள், விதுசேகர பாரதீ சுவாமிகள் இருவரும் வியாச பூஜை நிகழ்த்தி சாதுர்மாஸ்ய சங்கல்பம் மேற்கொண்டனர்.


இந்நாள் ‘குரு பூர்ணிமா’ என்று அழைக்கப்படுகிறது. இப்புனித நாளில், தொன்மையான காலத்தின் மகா ஜோதிகளான குருநாதர்களுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. குருவானவர் தமது பரம கருணையால், நீண்ட, இடையறாத, தொடர்ச்சியான ஆசார்ய பரம்பரையின் வழியாக, பிரம்ம ஞானமாகிய பிரம்ம வித்யையை நமக்கு அருளியுள்ளனர். இந்நாள், ‘வியாச பூர்ணிமா’ என்றும் அழைக்கப்படுகிறது. அன்று செய்யப்படும் பூஜை ‘வியாச பூஜை’ எனப்படுகிறது. ஈஸ்வரனிடமிருந்தே துவங்கும் நமது குரு பரம்பரையில், பகவான் வேத வியாசர் சனாதன தர்மத்தை பின்பற்றும் அனைவராலும் மிக உயர்ந்த மதிப்புடன் போற்றப்படுகிறார். வேதங்களை நான்காக பகுத்தும், உபநிஷதங்களின் சாரத்தை தமது பிரம்ம சூத்திரங்களில் தொகுத்தும், மஹாபாரதம் எனும் மாபெரும்  இதிகாசத்தையும் பதினெட்டுப் புராணங்களையும் இயற்றியும், பகவான் வேத வியாசர் உலக நன்மைக்கு அருஞ்செயல் புரிந்துள்ளார். ஸ்ரீ சுகர், ஸ்ரீ கவுடபாதர், ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர் ஆகியோர் இப்பரம்பரையின் ஜோதியை அணையாமல் காத்து வந்தனர். தொடர்ந்து மகா குருவான ஜகத்குரு ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவதரித்து, சனாதன தர்மத்தை மீட்டெழச் செய்து, அதன் உபதேசங்களை பாரதவர்ஷம் முழுவதும் பரவச் செய்தார். வியாச பூர்ணிமையும், முழுசாதுர்மாஸ்ய காலமும், நமது குரு பரம்பரை முழுமைக்கும் நன்றி செலுத்தவும், நமது குரு பக்தியைப் புதுப்பித்துக் கொள்ளவும் மிகவும் மங்களகரமான தருணங்களாகும். இன்று நடைபெறும் புனர் பூஜையினை தொடர்ந்து சுவாமிகள் இருவரும் செப். 26ம் தேதி வரை சிருங்கேரியிலேயே தங்கி, பக்தர்களுக்கு ஆசீர்வாதம் செய்வர். இது ஜகத்குரு பாரதீதீர்த்த மஹா சந்நிதானத்தின், 52வது சாதுர்மாஸ்யம் என்பது குறிப்பிடத்தக்கது. குருசேவை செய்ய விரும்பு வோர் https://seva.sringeri.net/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். 

  – நமது நிருபர் –: 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !