உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உத்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உத்ஸவம் துவக்கம்

திருக்கோஷ்டியூர்; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் திருவாடிப்பூர உத்ஸவம் துவங்கியது. ஆக.,15ல் தேரோட்டம் நடைபெறும்.


சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த நட்சத்திரத்தை முன்னிட்டு  திருவாடிப்பூர உத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். ஆக.5ல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது. மறுநாள் காலை 8:00 மணி அளவில் கல்மண்டபத்தில் ஆண்டாள், பெருமாள் கொடி மரம் எதிரில் எழுந்தருளினர். பின்னர் சக்கரத்தாழ்வாரும், கருடன் படம் வரையப்பட்ட கொடிப்படமும் திருவீதி வலம் வந்தனர். பின்னர் கொடிப்படத்திற்கும்,சுவாமிகளுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.


தொடர்ந்து பட்டாச்சார்யார்களால் கொடியேற்றம் நடந்தது.பின்னர் தர்ப்பைப்புற்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு அலங்காரத் தீபாராதனை நடந்தது. இரவில் உத்ஸவம் துவங்கி ஆண்டாள்,பெருமாள் திருவீதி புறப்பாடு நடந்தது. தொடர்ந்து தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் வாகனங்களில் ஆண்டாள்,பெருமாள் திருவீதி உலாவும் நடைபெறும். ஆக.12 மாலை 5:30 மணி அளவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் எழுந்தருளி ராஜகோபுரம் அருகே சூர்ணாபிேஷகம் நடைபெறும். ஆக.,15 காலை 7:16 மணி அளவில் ஆண்டாள்,பெருமாள் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து பக்தர்கள் அர்ச்சனை செய்து சாமி தரிசனம் செய்கின்றனர். மாலை 4:12 மணிக்கு மேல் தேர் வடம் பிடித்து தேரோட்டம் துவங்கும். ஆக.,16 காலையில் தீர்த்தவாரி, இரவில் தங்கப்பல்லக்கில் சுவாமி ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உத்ஸவம்  நிறைவடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !