வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி சன்மார்க்கர்கள் சென்னைக்கு பிரசார பயணம்
வடலுார்: வடலுாரை புனித நகரமாக அறிவிக்க கோரி, சன்மார்க்கர்கள், சென்னைக்கு பிரசார பயணம் மேற்கொண்டனர்.
தமிழக அரசு, வடலுாரில் உள்ள மது, மாமிச கடைகள் மற்றும் அசைவ ஓட்டல்களை முற்றிலுமாக அகற்றி, புனித நகரமாக அறிவிக்க வேண்டும் என, சன்மார்க்கர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்த கோரிக்கை மனுவை, நடைபயணமாக சென்னை சென்று முதல்வரிடம் அளிக்க சன்மார்க்கர்கள் முடிவு செய்து, போலீசில் அனுமதி கோரினர்.
பாதுகாப்பு கருதி வாகன பிரசாரம் மேற்கொள்ள வடலுார் போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி,நேற்று காலை சன்மார்க்க சங்கத்தினர் வடலுார் சத்திய ஞான சபையில் இருந்து, 10 நாட்கள் நடைபெறும் சுத்த சன்மார்க்க எழுச்சி குறித்த வாகன பிரசாரத்தை துவக்கினர்.
இதில் பல்வேறு சன்மார்க்க சங்கங்களை சேர்ந்த ஏராளமான சன்மார்க்கத்தினர், வடலுாரை புனித நகரமாக்குவது தொடர்பான பதாகைகள், கோஷங்களை எழுப்பி கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், பெண் சன்மார்க்கர்கள் கோலாட்டம் ஆடினர்.
நேற்று துவங்கிய வாகன பிரசாரத்தை துவங்கிய சன்மார்க்கர்கள், வரும் 21ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளனர்.