அமராவதி தீப ஆரத்தி திருவிழா கொழுமத்தில் கோலாகலம்
உடுமலை: உடுமலை அமராவதி ஆற்றில் மழை வேண்டியும், நீர் வளம் பெருகவும், அமராவதி தீப ஆரத்தி திருவிழா இரு நாட்கள் நடந்தது.
உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. நடப்பாண்டு, பருவ மழைகள் பொய்த்து, அணை நீர்மட்டம் சரிந்துள்ளதோடு, ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளது. மழை வேண்டியும், நீர் வளம், வேளாண் வளம் பெருகவும், அகில பாரத சன்யாசிகள் சங்கம் மற்றும் ஸ்ரீ தாண்டேஸ்வரர் தெய்வீக திருப்பணி மன்றம், காசிவிஸ்வநாதர் அறப்பணி மன்றம், கோட்டை மாரியம்மன் வழிபாட்டுக்குழு, கரிவரதராஜ பெருமாள் கோவில் திருப்பணிக்குழு மற்றும் பொதுமக்கள் சார்பில், மடத்துக்குளம் கொழுமம் அமராவதி ஆற்றில், அமராவதி தீப ஆரத்தி விழா, இரு நாட்கள் நடந்தன. அமராவதி ஆற்றில், இரு நாட்களும், முற்றோதல், வருண ஜெபம், அமராவதி அணைக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அமராவதி தீப ஆரத்தி நிகழ்ச்சிகள் நடந்தன. இதற்காக, கொழுமம் அமராவதி ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ஆனைமலை ஆர்ஷவித்யா பீடம் பூஜ்ய ஸ்ரீ ததேவாநந்த சரஸ்வதி சுவாமிகள் தலைமை வகித்தார். சரவணம்பட்டி சிரவை ஆதீனம் குமரகுருபர ராமானந்த சுவாமிகள், மதுரை ஆதீனம் ஸ்ரீமத் விஷ்வ லிங்க தம்பிரான் சுவாமிகள், திருமூர்த்திமலை குருமகான் ஸ்ரீ பரஞ்சோதியார் மற்றும் சன்யாசிகள், பொதுமக்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அமராவதி அன்னையை வணங்கியும், மழை வேண்டியும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.