PUBLISHED ON : ஜூலை 06, 2025

குழந்தைகளிடையே தற்போது அதிகரித்து வரும் பார்வை கோளாறுகளால் ஒன்று சோம்பேறிக் கண்கள் Lazy Eyes. இதை, 'அம்லியோபியா' Amblyopia என்று சொல்லுவோம்.
கண்களின் உட்புறத்தில் ரெடினா என்ற விழித்திரை உள்ளது. இது, பார்க்கும் பொருளின் பிம்பத்தை ஒளிக் கற்றைகளாக மாற்றி மூளைக்கு அனுப்பும். இந்த உலகத்தை கண்களால் பார்ப்பதாக நாம் நினைத்தாலும், உண்மையில் மூளையின் உதவியுடனேயே பார்க்கிறோம் என்பது தான் உண்மை.
மூளையில் உள்ள பார்வை நரம்புகள், ஒளிக்கற்றைகளை ஆராய்ந்து, அதன் இயல்பான வடிவங்களை கண்டறிந்து, இது பேனா, பென்சில், மரம், மலை, அருவி என்று அசல் வடிவத்தில் முப்பரிமாண கோணத்தில் காட்டுகிறது.
கண்கள் ஏன் சோம்பேறியாகிறது?
உண்மையில் பிரச்னை கண்களில் இல்லை; மூளையில் உள்ளது. கண்களுடன் தொடர்புடைய நரம்பியல் பிரச்னை இது.
பிம்பத்தை மூளைக்கு அனுப்பும் செயல்பாட்டில் ஏதேனும் பிரச்னை இருந்தால், சோம்பேறி கண்கள் உருவாகும்.
எப்படி?
கிட்டப் பார்வை, துாரப்பார்வை, மாறுகண், பிறவியிலேயே ஏற்படும் பார்வைக் கோளாறுகளால், இயல்பாகவே பார்வை மங்கலாகத் தெரியும். இதனால், ரெடினா மூளைக்கு மங்கலான பிம்பத்தை அனுப்பும். தொடர்ந்து இது போன்ற மங்கலான பிம்பங்களை ரெடினா மூளைக்கு அனுப்பும் போது, ஒரு கட்டத்தில் இதை பகுத்தாயும் வேலையை மூளை நிராகரித்து விடும்.
சோம்பேறிக் கண் பாதிப்பு பொதுவாக ஒரு கண்ணில் மட்டுமே ஏற்படும். அரிதாக இரண்டு கண்களிலும் வரலாம்.
இதற்கு காரணம், எந்த கண்ணின் வழியாக பிம்பம் தெளிவாக தெரிகிறதோ அதை மட்டுமே மூளை எடுத்துக் கொள்ளும். தெளிவற்ற பிம்பங்களை காட்டும் மற்ற கண்ணை நிராகரித்து விடும். மூளை நிராகரித்த கண் சோம்பேறிக் கண்ணாகி விடும்.
எப்படி தவிர்ப்பது?
குறைந்தபட்சம் 5 வயதிற்குள் குழந்தைக்கு கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னால், என் குழந்தை இயல்பாகத் தானே பார்க்கிறது; எதற்கு பரிசோதனை என்று பெற்றோர் கேட்கின்றனர்.
குழந்தையின் கண்களுக்கு பிம்பம் எப்படித் தெரிகிறதோ, அது தான் இயல்பானது என்று நினைக்கும். துாரத்தில் இருப்பது தெரியவில்லை; மங்கலாகத் தெரிகிறது என்று குழந்தைக்கு சொல்லத் தெரியாது. குழந்தை பிறந்து ஆறு மாதம், 1 வயது, 3 வயதில் முழு கண் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.
பார்வைக் கோளாறுகளை கண்டறிந்து, சரியான 'பவர்' கண்ணாடி அணிந்தால், 90 சதவீதம் இப்பிரச்னையை தடுக்கலாம்.
தேவையான சிகிச்சை, பயிற்சி அளித்தால் பார்வையை இயல்பாக மேம்படுத்த முடியும். எட்டு வயதிற்கு மேல் சோம்பேறிக் கண் இருப்பது தெரிந்தால், அதன்பின் இயல்பு நிலைக்கு கொண்டு வருவது சிரமம். குறைந்தபட்சம் பள்ளியில் சேர்ப்பதற்கு முன், எல்லா குழந்தைகளுக்கும் கண் பரிசோதனை அவசியம்.
டாக்டர் சுரஜ் நாயக்,
குழந்தைகள் நல கண் சிறப்பு மருத்துவர்,
கேவலா ஐ கேர், சென்னை
96006 01897
info@keshaveyecare.com www.keshaveeyecare.com