sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வெளிநாட்டு தகவல்கள்

/

"அமெரிக்கன் பாப்பையா" அகத்தியன் ஜான் பெனடிக்ட் - உடன் ஒரு சந்திப்பு! “தவிர்ப்போம் தமிங்கிலம்”

/

"அமெரிக்கன் பாப்பையா" அகத்தியன் ஜான் பெனடிக்ட் - உடன் ஒரு சந்திப்பு! “தவிர்ப்போம் தமிங்கிலம்”

"அமெரிக்கன் பாப்பையா" அகத்தியன் ஜான் பெனடிக்ட் - உடன் ஒரு சந்திப்பு! “தவிர்ப்போம் தமிங்கிலம்”

"அமெரிக்கன் பாப்பையா" அகத்தியன் ஜான் பெனடிக்ட் - உடன் ஒரு சந்திப்பு! “தவிர்ப்போம் தமிங்கிலம்”


ஜன 10, 2025

ஜன 10, 2025


Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேரிலாந்தில், மிதிவண்டி ஓட்டுபவர்களை ஊக்குவிப்பதற்காக எங்களால் உருவாக்கப்பட்ட ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதில், மிதிவண்டி ஓட்டத்திட்டங்களைப் பற்றி விவாதிக்க ஒரு வாட்ஸ்அப் குழுவும் உள்ளது. நான் உட்பட அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரை மாகாணங்களிலிருந்து பல மிதிவண்டி ஓட்டிகள் அந்த அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். ஒரு நாள், எங்கள் அமைப்பின் வாட்ஸ்அப் குழுவில் உள்ள நண்பர் ஒருவர் எனக்கு ஒரு காணொளியை அனுப்பி வைத்தார். ஒரு மிதிவண்டி ஓட்டி, தனது மிதிவண்டிப் பயணத்தின் நடுவில் ஓய்வு எடுக்கும்போது தமிழ் இலக்கியத்தை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது போல் அந்தக் காணொளியில் இருந்தது.

“துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்


துப்பாய தூஉம் மழை.”

என்ற திருக்குறளைச் சொல்லி, அதற்கு விளக்கம் அளிக்கும் காணொளிதான் அது. நான் தமிழில் கவிதை, கட்டுரை என்று தமிழ் மீது அதீத பற்று கொண்டு பயணிக்கத் தொடங்கிய தருணம் அது என்பதால், அந்தக் காணொளியைப் பதிவிட்ட நபரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. பின்னர், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்க விழா ஒன்றில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிட்டியது. அவரின் நட்பு இன்றும் தொடர்கிறது. அவர்தான் 'அமெரிக்கன் பாப்பையா' என்று பலராலும் அழைக்கப்படும் அகத்தியன் ஜான் பெனடிக்ட்.


இப்போது, நான், பல தமிழ் அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ் மரபு கலைஞர்கள் பற்றியெல்லாம் பரவலாகத் தினமலரில் எழுதுவதால் அவரைப் பற்றியும் எழுதலாம் என்று அணுகியபோது, அவர் அதற்குச் சற்றுத் தயங்கி சில மாதங்கள் கழித்து இப்போதுதான் அவரைப் பற்றி எழுத ஒத்துக்கொண்டார்.

அகத்தியன் ஜான் பெனடிக்ட்டுடன் நான் பலமுறை உரையாடி இருக்கிறேன். அவரின் நிகழ்ச்சிகள் பலவற்றை நேரில் கண்டு களித்திருக்கிறேன். தமிழுக்கும், தமிழர்களுக்கும் மனித குலத்திற்கும் அவர் ஆற்றும் பெரும்பணிகளை இந்த கட்டுரையில் காண்போம்.


அகத்தியன் ஜான் பெனடிக்டின் தமிழ்ப் பணிகள்

தாய்மொழி 'தமிழை' உலகிற்குப் பரப்புவதைத் தன் தலையாயக் கடமையாகக் கருதுகிறார். தமிழ்மொழித் தொடர்பாக வலைத்தளங்கள், வலைப்பதிவு, சமூக ஊடகப் பக்கங்கள், என உருவாக்கி, அவற்றின் மூலம் தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடுபற்றியத் தகவல்களைப் பகிர்கிறார். நல்ல தமிழில் பேச அனைவரையும் ஊக்குவிக்கிறார். நிகழ்ச்சிகள் மற்றும் தமிழ் மொழிப் பண்பாடுபற்றிய விழாக்கள், பட்டிமன்றங்கள், கருத்தரங்குகள் நடத்தி, தமிழரின் பாரம்பரியத்தை உலகத்திற்குப் பறைசாற்றுகிறார்.


தமிழ்ப் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், இரண்டே நிமிடத்தில் இனிய தமிழ்ச் சிற்றுரை ஆற்றுபவர் எனப் பன்முகத் திறமைசாலியான இவர், தமிழ்மொழி உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று என, அதன் வரலாற்றுப் பெருமையை அனைவருக்கும் எடுத்துரைப்பவர். சங்ககால இலக்கியங்கள், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் மொழியின் செழுமையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். தமிழ்மொழி நமது பண்பாட்டு அடையாளம், நம் உள்ளத்தின் பெருமையெனத் தன்னோடு இருப்பவர்களையும் உற்சாகப் படுத்துபவர்.

தமிழில் கவிதைகள், கதைகள், பாடல்கள், இசை போன்ற எல்லாவற்றையும் மேடை நிகழ்ச்சிகள் வாயிலாகவும், இரண்டு நிமிடக் காணொளிகள் வாயிலாகவும், அனைவருக்கும் கொண்டு சென்று சேர்ப்பவர்.


வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தில் இருபது ஆண்டுகளுக்கும் மேல் தன்னார்வலராகத் தொடர்பவர். மேலும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இரண்டு முறை பொறுப்பேற்றுப் பல முன்னெடுப்புகளைச் செயல்படுத்தியது என இவர் ஆற்றும் தமிழ்ப் பணிகள் ஏராளம். குறிப்பாக, இவர் தலைவராக இருந்த காலகட்டதில்தான் தமிழ்ச்சங்க நிகழ்ச்சிகளை நடுநிலைப் பள்ளிகளில் நடத்தும் நிலையை மாற்றி, பெரிய அரங்குகளிலும் உயர்நிலைப் பள்ளி மன்றங்களிலும் நடத்தும் வழக்கத்தைக் கொண்டு வந்தார்.

தவிர்ப்போம் தமிங்கிலம்


இவர் நடத்தும் “தவிர்ப்போம் தமிங்கிலம்” என்ற ஒரு நிகழ்ச்சி என்னை வெகுவாக ஈர்த்தது. மேலும், தமிழ்மொழிபற்றிய எனது சிந்தனைகளைத் தூண்டியது.

நமது தமிழ்மொழி, பாரம்பரியத்தைச் சுமந்து செல்லும் ஒரு அற்புதப் புதையல். இன்று, ஆங்கிலம் போன்ற பிற மொழிகள் முக்கியத்துவம் பெற்றிருக்கும் சூழலில், நமது தாய்மொழி தமிழை நாம் மறந்துவிடக் கூடாது. ஆங்கிலம் தெரிய வேண்டும், ஆனால், அதற்கு நாம் அடிமையாகக் கூடாது. தமிழைப் பிற மொழிக் கலப்பு இல்லாமல், குறிப்பாக, ஆங்கிலச் சொற்களைத் தவிர்த்துப் பேசப்பழகிக் கொள்ள வேண்டும் என்பது, இவரது வேண்டுகோளாக இருக்கிறது.


தமிங்கிலம் என்றால் தமிழும் ஆங்கிலமும் கலந்த கலவை என்று பொருள். தமிழில் பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம், நமது சொந்த மொழியின் மெய்ப்பொருள் மங்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம். தமிழ் மொழியில் முழுமையாகப் பேசவும், எழுதவும் பழகுவது, இன்றைய தலைமுறையினருக்கு அவசியம். அகத்தியன் அதற்கான பணிகளைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறார். தான் பேசும் சொற்கள் பலவும் தமிழே என்று நினைத்து இருந்தவர்கள், இன்று, எது தமிழ்ச் சொல் என்று தேடும் ஆவலைத் தூண்டுகிறார். தமிழ் மொழியின் செழுமை, அதன் இனிமை, நம்மைக் கவர்ந்து எடுக்கும். தமிழின் தனித்துவம் பாதுகாக்க, தமிங்கிலத்தை தவிர்த்து, தமிழின் அழகையும், ஆதிக்கத்தையும் உணர்ந்து செயல்பட, அகத்தியன் பல மேடை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். தமிழைப் பிற மொழிக் கலப்பு இல்லாமல் பேச வேண்டும் என்ற உணர்வை இன்று அமெரிக்க மண்ணில் செம்மையாக விதைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழின் பெருமையைப் பேணுதல் நம் கடமையாகும். நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும், இவர் முன்னெடுக்கும் முயற்சியைப் பகிர்ந்து, தமிழின் மெய்யான மகத்துவத்தை உணர்த்துவோம். 'தவிர்ப்போம் தமிங்கிலம், தழைப்போம் தமிழினம்” என்ற முழக்கத்துடன் முன்னேறுவோம். அவரின் முயற்சிக்குச் செவி சாய்ப்போம்!


கவன ஈர்ப்புப் பெயர்கள்

பெரும்பாலான தமிழர்களால் அறியப்படும் “அகத்தியன்” மற்றும் “அமெரிக்கன் பாப்பையா” ஆகிய தமிழ் ஆளுமைகளின் பெயரால் இவர் அமெரிக்காவில் அழைக்கப்படுகிறார். இவர் பட்டிமன்றங்களில் சிறப்பாக உரையாற்றுவதால் இங்குள்ள தமிழர்கள் அளித்த சிறப்புப் பெயர்தான் “அமெரிக்கன் பாப்பையா”. தமிழ் மீது அதீத பற்று கொண்டு இவராகவே சூட்டிக்கொண்ட பெயர் “அகத்தியன்”. அந்தப் பெயர்களுக்கு ஏற்றார் போல் இன்று அமெரிக்கா முழுவதிலும் மற்றும் உலகத் தமிழர்களிடமும் தன் முத்திரையைத் தனது தமிழின் சீரியப் பேச்சால் சிறப்புடன் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.


பட்டிமன்றங்கள், மேடைப் பேச்சுக்கள் அனைத்திற்கும் தனக்குத்தானே ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டு, குழு உறுப்பினர்களுக்குள்ளேயே, ஓர் அணி, எதிர் அணி என்று அமைத்துக்கொள்வதே நாம் அறிந்த வழக்கம். ஆனால், இவரோ தனது நிகழ்ச்சிகளுக்குப் பார்வையாளர்களாக வருபவர்களை ஊக்கப்படுத்தி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்துப் பார்வையாளர்களைப் பேச்சாளர்களாக மாற்றும் திறன் படைத்தவர். “ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை” என்பார்கள். இவர் சர்க்கரைக்கு மாற்றாக இல்லாமல், ஆலைகளை உருவாக்க வேண்டும் என்று முயல்பவர். இவரின் உந்துதலால் மேடையேறித் தமிழ் உரை ஆற்றியவர்கள் பலர். இவரின் தமிழ்ப்பற்றால் ஈர்க்கப்பட்ட பல தமிழர்களில் நானும் ஒருவன்!

அங்கீகாரம் மற்றும் விருதுகள்


அமெரிக்காவின் நாற்திசை மாகாணங்களில் உள்ள தமிழ்ச் சங்கங்களும் இவரைச் சிறப்புப் பேச்சாளராக அழைத்து அங்கீகரிக்கின்றனர். “அமெரிக்கன் பாப்பையா”, “சொற்செல்வர்” என்று விருதுகள் அளித்துள்ளனர். பல்கலைக்கழகங்கள், துணைவேந்தர்கள், அரசியல் தலைவர்கள், தமிழ் ஆளுமைகள், தொழில் அதிபர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இவரை அங்கீகரித்து இவரின் தமிழ் ஆற்றலைப் போற்றித் தங்களது நிகழ்ச்சிகளுக்கும், தாங்கள் செல்லும் நிகழ்ச்சிகளுக்கும், இவருக்கு அழைப்பு விடுக்கின்றனர். தமிழ் ஆற்றல் இளம் தலைமுறையினரைச் சென்று சேர, இங்குள்ள தமிழ்ப் பள்ளிகளுக்கும் சென்று சிறப்புரை ஆற்றுகிறார்.

மனிதநேயப் பண்புகள்


அகத்தியன் ஜான் மனிதர்கள் ஒரு சமூகமாகவும், ஒற்றுமையாகவும், ஒருவருக்கொருவர் உதவியாகவும் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பண்பாளர். தான் ஒரு கிருத்துவ பின்புலத்திலிருந்து வந்தபோதிலும், மற்ற மதத்தினரின் ஆலயங்களுக்கும் செல்பவர். மேடைப் பேச்சுகளில் இந்து மதப் பக்திப் பாடல்களையும் பாடி, “மதம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது, மனிதர்களை நல்வழிப் படுத்தவே மதம்” என்று மதங்களின் ஒற்றுமையைப் போதிக்கும் மனிதநேயவாதி. தமிழில் மட்டுமே தான் நான் பேசுவேன் என்று அடம் பிடிக்காமல் ஆங்கிலத்திலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி, மற்ற மொழியினரையும் மதிக்கும் மென்மையானவர். தமிழில் பேசும்போது மட்டும் மற்ற மொழி கலக்காமல் பேசுங்கள் என்று கூறுபவர். ஆனால் மற்ற மொழிகளுக்கு எதிரி அல்லர். தான் என்னதான் சிறப்புப் பேச்சாளர், முன்னாள் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத் தலைவர், உலகத் தமிழர்கள் பலர் அறியும் பிரபலம் என்று இருந்தாலும், சிறப்பு விருந்தினராக மட்டும் தான் வருவேன், முதல் வரிசையில் தான் அமர்வேன் என்று எந்தக் கட்டுப்பாடுகளும் விதிக்காமல், எளிமையாக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். சாதாரணமாக ஒரு மேடையில் நடக்கும் இரு நிகழ்ச்சிகளின் இடையே காலதாமதம் ஏற்படும்போது தொகுப்பாளர் இவரைத் தற்காலிகமாகப் பத்து இருபது நிமிடங்கள் பேச முடியுமா என்று அழைத்தாலும், முகம் சுளிக்காமல் மேடையேறிப் பார்வையாளர்களின் நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றி அனைவரையும் தன்வசம் ஈர்க்கும் நற்குணம் படைத்தவர்.

தமிழ் படிப்பதாலும் தமிழிற்கெனப் பல பணிகள் செய்வதாலும் மற்ற வேலைகளைத் துறந்தேன் என்று இல்லாமல், மிதிவண்டி ஒட்டுதல், நடத்தல், ஓடுதல் என்று பல உடற்பயிற்சிகளைச் செய்து உடல்நலம் பேணுவதன் தேவையை மக்களுக்குப் பரப்புபவர் இவர். அகத்தியன் ஜான் பெனடிக்ட்டின் தமிழ்ப்பற்று, தமிழ்ப் பணிகள், மனிதநேயம் மற்றும் அவர் முன்னெடுக்கும் 'தவிர்ப்போம் தமிங்கிலம்' போன்ற உயர் நோக்கங்கள் மேலும் சிறப்புற வாழ்த்துவோம்! அவரின் பணிகள் மென்மேலும் தொடரட்டும்...


- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்






      Dinamalar
      Follow us