சிதிலமடைந்த சிவன் கோவில்; அரசு நிதி ஒதுக்கி திருப்பணிக தொடங்க கோரிக்கை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா விக்ரமசோழநல்லூர் என்று அழைக்கப்படும் புதுத்துறை கிராமம் உள்ளது. இங்கு 3ம் குலோத்துங்க சோழனால் அமைக்கப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத தரணீஸ்வரர் கோவில் உள்ளது. இதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த சிவன் கோவில் கருங்கல் மற்றும் செங்கல் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது. போதிய பராமரிப்பு இன்றி குளம், கோவிலின் முன்பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்த நிலையில் எஞ்சிய கோவில் மண்டபங்கள் சன்னதிகள் அனைத்தும் சிதிலமடைந்து கீழே விழுந்து மிகவும் மோசமாக காணப்படுகிறது. இக்கோவிலில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் எம பயம் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதனை அறிந்து பலரும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறும் இந்த கோவிலை தேடி கண்டுபிடித்து வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இதனிடையே இந்த கோவிலை புனரமைக்க கிராம மக்கள் வைத்த தொடர் கோரிக்கையின் பேரில் கடந்த 2013 ஆம் ஆண்டு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்திட இந்து சமய அறநிலையத்துறையால் ரூ.123 லட்சம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் 13 ஆண்டுகளை கடந்தும் திருப்பணிகள் தொடங்கவில்லை. அதிமுக., திமுக அரசுகள் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது அமைந்துள்ள தவெக. அரசு உடனடியாக நிதி ஒதுக்கி திருப்பணி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.