கொளுத்தும் வெயிலிலும் காத்திருந்து முருகனை தரிசனம் செய்த பக்தர்கள்
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து, நேற்று மூலவரை தரிசனம் செய்தனர்.
திருத்தணி முருகன் கோவிலில், வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில், திரளான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
அவர்கள், பொது வழியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒன்றரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். அதேபோல, 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை வழிபட்டனர்.
நேற்று இருசக்கர வாகனங்கள், குறிப்பிட்ட கார்கள் மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் நலன்கருதி, கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் மலைக்கோவிலுக்கு இயக்கப்பட்டன.
முன்னதாக நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்க வேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது.
திருத்தணி ஏ.எஸ்.பி., ஷூபன் திமான் தலைமையில், 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.