உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலகளந்த பெருமாள் கோவில் கொடி கம்பத்தில் செப்பேடு, கல்வெட்டு கண்டுபிடிப்பு

உலகளந்த பெருமாள் கோவில் கொடி கம்பத்தில் செப்பேடு, கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கொடி கம்பத்தில் பிற்கால செப்பேடுகள் மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப் பட்டுள்ளது.


திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்காக கொடி கம்பம் சீரமைக்கும் பணி நடந்தது. அப்பொழுது கம்பத்தின் கீழ் பீடத்தில் உள்ள செப்பு தகடு மற்றும் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. தொல்லியல் துறை உதவி இயக்குனர் லோகநாதன் தலைமையில், கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் உதியன், சிறப்பு தலைவர் விழுப்புரம் வீரராகவன், செல்வகணபதி ஆகியோர் படியெடுத்து ஆய்வு செய்தனர்.


இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் உதியன் கூறியதாவது. 21 ம் பட்டம் ஜீயர் திருவேங்கட ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் பட்டத்திற்கு வந்த 1871ம் ஆண்டிற்கு அடுத்த ஆண்டான 1872ல் துஜகம்ப கைங்கரியத்தை பட்டணம் சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் ராமானுஜ தாசன் செய்து கொடுக்கும்படி விண்ணப்பம் செய்து கொள்ள, திருவேங்கட ராமானுஜதாசன் தாமிர பாத தகடு முதலிய சமஸ்த காரியங்களையும், மார்கழி மாதம் 8ம் தேதி 1877 பொருத்தியுள்ளார்கள். புதிய துஜஸ்கம்பம் பிரதிஷ்டை, பவ வருடம், தை மாதம் 27ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 7:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கும்ப லக்கினத்தில் சிறப்பாக நடைபெற்றது என தெரிய வருகிறது. அதேபோல் கொடிக்கம்பக் கல்வெட்டில் பதியப்பட்டிருக்கும் தகவலானது. ஆதி மாமுனிகள் 21 வது மதுரகவி ராமானுஜ சம்பந்தி அவர்கள் வாலாஜாபேட்டை செட்டியார் அவர்களின் மகனுமாகிய வெங்கடேச செட்டியார் திருவேங்கட ராமானுஜர் அவர்களால் இப்பணி பூர்த்தி செய்யப்பட்டது என்பதையும், இறுதியில் வைசியர் கோத்திரம் என்றும் கல்வெட்டு நிறைவு பெறுகிறது. எனவே இது பிற்காலத்தைச் சேர்ந்த 1877 ஆம் ஆண்டு நடந்த கும்பாபிஷேக குறித்த கல்வெட்டு ஆதாரம் என தெரிகிறது. இவ்வாறு உதியன் கூறினார். ஆய்வின்போது தேவஸ்தான ஏஜென்ட் கோலாகலன் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !