திருத்தணியில் ஆடி ஜாத்திரை விழா; அம்மன் கோவில்களில் விமரிசை
திருத்தணி: ஆடி மாத ஜாத்திரை விழாவையொட்டி, திருத்தணி நகரில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
திருத்தணி பெரிய தெருவில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன் கோவிலில், நேற்று ஜாத்திரை விழா நடந்தது. காலை 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, 1,000த்திற்கும் மேற்பட்ட பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு, பூ கரகம் பைபாஸ் சாலையில் இருந்து, ஊர்வலமாக தணிகை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்திற்கு வந்தடைந்தது. இரவு 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூங்கரகத்துடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில், தி.மு.க., வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காந்தி, முன்னாள் எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி அ.தி.மு.க., – எம்.எல்.ஏ., அரி, திருத்தணி நகராட்சி தலைவர் சரஸ்வதிபூபதி உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதே போல், திருத்தணி மேட்டுத்தெரு எல்லை அம்மன், அக்கய்யா நாயுடு சாலை தணிகாசலம்மன், காந்தி நகரில் உள்ள துர்க்கையம்மன், ராதாகிருஷ்ணன் தெருவில் உள்ள சக்தி அம்மன் உட்பட, திருத்தணி நகராட்சியில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும், காலையில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தன.