பரமக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் சத்ரு சம்ஹார ஹோமம்; சண்முகார்ச்சனை
பரமக்குடி: பரமக்குடி தரைப்பாலம் அருகில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 5ம் ஆண்டு சத்ரு சம்ஹார ஹோமம், சண்முகார்ச்சனை நடந்தது.
கோயிலில் மூலவர் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி அருள் பணிக்கிறார். இங்கு ஆடி கிருத்திகையையொட்டி இன்று காலை 7:00 மணிக்கு அனுக்கையுடன் விழா துவங்கியது. விநாயகர் மற்றும் பஞ்சகவிய பூஜை, வேதிகார்ச்சனை, வேல் அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து சத்ரு சம்ஹார மூல மந்திர திரிசதி அர்ச்சனை, ஹோமம், சன்னவதி ஹோமம் நடத்தப்பட்டது. சத்ரு சம்ஹார ஹோமம் மூலம் எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளிடம் இருந்து பாதுகாப்பு மற்றும் தடைகள் நீங்கவும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் 6 விதமான மலர்கள், பழங்கள், நைவேத்தியங்கள் படைத்து ஆறு குருக்கள் இணைந்து சண்முகார்ச்சனை நடத்தினர். 11:30 மணிக்கு மகா பூர்ணாகுதி நடந்து கடம் புறப்படாகி சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. ஏற்பாடுகளை சத்ரு சம்ஹார ஹோம விழா குழுவினர் செய்தனர்.