புதிதாக கோவில்களுக்கு யானை வாங்க விதித்த தடை உத்தரவு ரத்து
சென்னை: ‘புதிதாக கோவில்களுக்கு யானைகள் வாங்கக்கூடாது’ என, தமிழக அரசுக்கு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘தமிழகம் முழுதும் உள்ள கோவில்கள் மற்றும் தனிநபர்களிடம் உள்ள யானைகளை, அரசு யானைகள் மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்க வேண்டும். புதிதாக கோவில்களுக்கு யானைகள் வாங்கக்கூடாது’ என, 2023ல், சென்னை உயர் நீதிமன்ற அமர்வின் தனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர், திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: தமிழ்நாடு வளர்ப்பு யானை பராமரிப்பு விதிகளுக்கு முரணாக, யானை ஒன்றின் உடல்நிலை தொடர்பான வழக்கில், இதில் சம்பந்தப்படாத பிற கோவில்கள் மற்றும் அறநிலையத்துறை தரப்பை கேட்காமல், ஒட்டு மொத்தமாக, மாநிலம் முழுதும் உள்ள கோவில் யானைகளை, மறுவாழ்வு முகாம்களுக்கு மாற்றுவது குறித்து, முடிவெடுக்கும்படி உத்தரவிட முடியாது. அதேபோல், கோவில்களில் புதிதாக யானை வாங்கக்கூடாது என்பதும் சட்டப்படி செல்லாது என்பதால், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.