முருகனின் ஆறாம்படை வீடு சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
மதுரை; முருகப் பெருமானின் அறுபடைகளில் 6-ஆவது படைவீடாக கிறது சோலைமலை முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இது ஆறாவது படைவீடாகும். சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும் பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்தை காணலாம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் கோயில் சோலைமலை மட்டுமே. முருகன் அவ்வையாரிடம் "சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்ற திருவிளையாடலை நிகழ்த்தியது இங்கு தான். இத்தகைய சிறப்பு மிக்க தலத்தில் கடந்த 2014ம் ஆண்டு வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து 12 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இந்த கோவிலுக்கு அறநிலையத்துறை குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்தது. இதையொட்டி கடந்த ஆண்டு பாலாலயம் நடந்தது. அதன் பிறகு திருப்பணிகள் தொடங்கியது. கடந்த மார்ச் 8 ம் தேதி கோவில் வளாகத்தில் முகூர்த்தகால் நடப்பட்டது. இந்நிலையில் கோவில் திருப்பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் ஜூலை 1ம்தேதி முதல் மகா கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது.
இன்று அதிகாலை 4 மணிக்கு 6ம் கால யாகசாலை பூஜை விநாயகர் பூஜையுடன் நடைபெற்றது. பின்னர் காலை 5.15 மணிக்கு மஹா பூர்ணாகுதி நிறைவு பெற்றதும் புனித தீர்த்தக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.