உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருநட்சத்திர விழா

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருநட்சத்திர விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தில், சங்கராச்சாரியாராக இருந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருநட்சத்திரமான அவிட்ட நட்சத்திரத்தை ஒட்டி, வேத பாராயணங்கள் மற்றும் சிறப்பு துாப, தீப ஆராதனைகளுடன் திருநட்சத்திர விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

​விழாவையொட்டி, காஞ்சி சங்கர மட வளாகத்தில் உள்ள மகா பெரியவா மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பிருந்தாவனத்திற்கு, அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து, பிருந்தாவனங்கள் வண்ணமயமான மலர்களால் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, வேதவிற்பன்னர்கள் வேத பாராயணத்துடன் சிறப்பு துாப, தீப ஆராதனைகள் நடைபெற்றன.

இவ்விழாவில், சங்கர மட இளைய பீடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று, பிருந்தாவனங்களுக்கு சிறப்பு தீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார்.

இந்த திருநட்சத்திர விழாவில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !